முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நேற்றைய தினம் விழுப்புரம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிறு கனிமம் துறையின் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மலைகள், கல்குவாரிகள், கிரிஷர்கள்… தமிழக முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த தொழில் தற்போது முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. தமிழக அரசுக்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டி தருகின்ற துறை மட்டுமில்லாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்யக்கூடிய துறை அது.

விழுப்புரம் – செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம்.

அந்தத் துறையை நம்பிதான் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இன்றைக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்கமே அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க முடியாது. அதுவும், தி.மு.க அரசு பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலத்தில், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. காலியிடங்களும் நிரப்பப்படவில்லை. மாறாத லட்சக்கணக்கான பணியிடங்கள் இந்த அரசால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த கனிம வளத்துறையை பல்வேறு துறைகள் நம்பியிருக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 270 கல்குவாரிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை நம்பி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த தொழில் இரண்டு நாள்களாக முடங்கி இருக்கிறது. 

சட்டவிரோத கல்குவாரிகளும், வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்ற கனிம வளங்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 15,000 லோடு கனிம வளங்கள், முறையற்ற, அனுமதி இல்லாமல், அரசு மற்றும் அதிகாரிகளுக்கு தெரிந்தே கடத்தப்படுகின்றது. அது முறைப்படுத்தப்பட்டு, அந்த வருவாய் அரசுக்கு வரவேண்டும். ஆனால் இந்த அரசு அதை தடுப்பதற்கு பதிலாக… கனிமவள குவாரிகளை நடத்திக் கொண்டிருக்கின்ற, சிறிய, நடுத்தர தொழிலதிபர்களை மிரட்டுகிறது, அச்சுறுத்துகிறது. 

மு.க.ஸ்டாலின், சி.வி.சண்முகம்

கடந்த இரண்டாண்டு கால மு.க.ஸ்டாலின் ஆட்சியிலே பல்வேறு தொழில்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றன, இங்கே வருவதற்கு அச்சப்படுகிறார்கள். அதே வேளையில், பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே வந்து தொழில் செய்வதற்கு பல்வேறு சலுகைகளை தருகிறது இந்த அரசு. ஆனால் இங்குள்ள சிறு, குறு, நடுத்தர கல்குவாரி நடத்துபவர்கள்… அரசிடம் எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்கவில்லை. சட்டத்துக்கு உட்பட்டு அமைதியான முறையில், எளிமையாக தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கை. ஆனால், ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக, ஆதாயத்திற்காக இந்த கல்குவாரிகளை இன்றைக்கு இந்த அரசு பழி வாங்குகிறது. சட்ட விதிகளை பின்பற்றாமல், ஆய்வு செய்யாமல், வாய் வழியாகவே… `நீங்கள் முறைகேடாக தொழில் செய்கிறீர்கள். உங்கள் குவாரி இழுத்து மூடப்படுகிறது’ என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட சிலரை இந்த அரசு தொழில் செய்யவிடாமல் முடக்கிக் கொண்டு வருகிறது. 

இதனால் பாதிக்கப்பட்டவர்கள், துறை அதிகாரியை சென்று பார்த்தால்… “நீங்கள் இன்னாரை பாருங்கள்” என்று சொல்லி அனுப்புகிறார்கள். `இன்னார் என்பது யார்?’ இது அரசுக்கும், முதலமைச்சருக்கும் தெரியுமா..? தெரிந்து நடக்கிறதா, இல்லை தெரியாமல் நடக்கிறதா? தெரியாமல் நடந்திருந்தால் இப்போது நாங்கள் சொல்கிறோம். நீங்கள் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தத் துறையின் இயக்குநர் நிர்மல்ராஜ், முதலமைச்சர் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு உறுதி அளித்திருக்கிறார். `நான் ஓராண்டுக்கு இவ்வளவு தொகையை இதிலே வசூலித்துக் கொடுக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

அதன்படி சட்டவிரோதமாக இந்த தொழிலை செய்து கொண்டிருக்கிற கல்குவாரிகளை ஆய்வு என்ற பெயரில் அனைத்தையும் மூடி உத்தரவிட்டு கொண்டு வருகிறார். குவாரி மூடப்பட்டதும் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. உடனே அவர்கள் சொல்வது போல், இன்னாரை சந்தித்து செய்ய வேண்டிய முறைகளை எல்லாம் செய்தப் பிறகு, நூறு மடங்காக போடப்பட்ட அபராதம், இரண்டு மடங்காக குறைபடுக்கப்படுகிறது. இதே இயக்குநரே அப்படி குறைத்திருக்கிறார். 

சி.வி.சண்முகம்

`இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்’ என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார், வரவேற்கிறோம். அனுமதியின்றி இயங்கும் குவாரிகள் மீதும், கனிமவளங்களை கடத்துபவர்களையும் இரும்பு கரம் கொண்டு அடக்குங்கள். அதே இரும்பு கரத்தை கொண்டு பெரிய பெரிய நிறுவனங்கள் மீதும் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு இந்த குவாரி தொழில் செய்பவர்களில் பாதிப்பேர் திமுக-வை சேர்ந்தவர்கள். ஆனால் இந்த பழிவாங்கும் நடவடிக்கை அவர்கள் மீது பாய்கிறதா? கன்னியாகுமரி, கோயம்புத்தூரில் இருந்து 10,000 வண்டி கனிமவளங்கள் தினந்தோறும் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. ஏன், இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது? வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களை கடத்தி செல்லலாம்… ஆனால், தமிழ்நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கான கனிமவளங்களை எடுத்து செல்வதற்கு ஏன் இந்த அரசு முட்டுக்கட்டை போடுறது? என்ன நோக்கம்? என்ன காரணம்? யாருடைய ஆதாயம்? ஒரு தவறான அதிகாரியின் பேராசை காரணமாக இந்த கனிமத் தொழில் நசிந்து கொண்டிருக்கிறது. 

கனிமவளம்

அந்த அதிகாரி, துறையின் அமைச்சருக்கு தெரியாமல் செய்திருப்பார் என சொல்லவதற்கு வாய்ப்பே இல்லை. முதலமைச்சர் குடும்பத்தை சேர்ந்த சக்தி வாய்ந்த ஒருநபர், இத்துறை இயக்குநர் மூலமாக பங்கு கேட்கிறார். முதலீடே போடாமல், யாரோ உழைத்ததில் பங்கு கேட்கிறார், இதுதான் நடக்கிறது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் வருமானத்தை கெடுக்கும். ஆகவே, முதலமைச்சர் மட்டுமல்ல, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், இந்த கனிமத் தொழில் முனைவோரை காக்கும் கடமை இருக்கிறது” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/nBVtF1o