மாங்கனிக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து தனியாக லெட்டர் பேட் கட்சி நடத்திவரும் பெண் ஒருவர், சென்னை ஈ.சி.ஆர் பகுதியிலுள்ள டாஸ்மாக் பார் உரிமையாளர்களை மிரட்டி கல்லாகட்டுவதை வழக்கமாக்கியிருக்கிறாராம். மைக்கைப் பிடித்தால், “நீதிடா… நேர்மைடா…” எனப் பேசும் இவர், ஏற்கெனவே இது போன்ற விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவராம். ‘மீண்டும் வசூல் வேட்டையில் இறங்கிவிட்டார் அம்மணி’ என்று புகார்கள் வரிசைகட்டத் தொடங்கியிருப்பதால், ‘விரைவில் அவர் கம்பி எண்ணுவார்’ என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.
சர்ச்சையில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த தி.மு.க பிரமுகர் ஒருவர், ரிலாக்ஸ் செய்வதற்காகத் தன் ஆதரவாளர்களுடன் கோவாவுக்குச் சென்றிருக்கிறார். அவர்களுக்குச் சமைத்துப் போடுவதற்காகச் சமையல் பொருள்களுடன் சமையல்காரர்களும் தனி காரில் சென்றிருக்கிறார்கள். இன்பச் சுற்றுலா முடிந்து திரும்பும் தருணத்தில், தனது மாவட்டச் செயலாளர் பதவியையும் பறிப்பதற்காக எதிரணியினர் காய்நகர்த்திய செய்தியை அறிந்து கடும் ஆத்திரமடைந்தாராம் மாஜி. மீண்டும் டென்ஷன் மோடுக்கு மாறிய அவர், சில நிர்வாகிகளை வீட்டுக்கே அழைத்து வார்னிங் கொடுத்தாராம். சிலரை ஒருமையில் பேசி மிரட்டியதாகவும் சொல்கிறார்கள். “அண்ணே பொறுமையைக் கடைப்பிடிங்கண்ணே… ஏற்கெனவே கோபப்பட்டுதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கீங்க!” என்று அவரது ஆதரவாளர்கள் அவரை அமைதிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் தன் மாவட்டச் செயலாளர் பதவியைக் கைப்பற்றத் துடிக்கும் கோயில் நகர நிர்வாகிமீது கொலை காண்டில் இருக்கிறாராம் மாஜி.
மதுரை மேயர்மீது சொந்தக் கட்சி கவுன்சிலர்கள் முதல் அமைச்சர் மூர்த்தி தரப்பு வரையில் அதிருப்தியில் இருப்பதும், அது தொடர்பாக அறிவாலயத்துக்குப் புகாருக்கு மேல் புகார் அனுப்பியதும் தெரிந்த செய்தி. இப்போது அந்த வரிசையில், ம.தி.மு.க எம்.எல்.ஏ புதூர் பூமிநாதனும் இணைந்திருக்கிறார். “பலமுறை எடுத்துச் சொல்லியும் என் தொகுதியில் எந்தப் பணியும் நடைபெறவில்லை.

நான் மக்களுக்கு சேவை செய்வதற்குக் கஷ்டப்பட்டு எம்.எல்.ஏ-வாகி வந்தவன், ராஜினாமா செய்யும் மனநிலையை உருவாக்கிவிடாதீர்கள்” என்று பொதுமேடையிலேயே மேயரைக் குத்திக்காட்டியிருக்கிறார் அந்த எம்.எல்.ஏ. துணை மேயராக இருக்கும் சி.பி.எம்-மைச் சேர்ந்த நாகராஜனும் தன் பங்குக்கு ஆதங்கத்தைக் கொட்ட, பிரச்னையை சீரியஸாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறதாம் அறிவாலயம். மேயருக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்திருக்கும் நிலையில், தங்களை ஆதரிக்கவேண்டிய அமைச்சர் பி.டி.ஆரும் கண்டுகொள்ளாமல் இப்படிக் கைவிட்டுவிட்டாரே என்று கூடுதல் கலக்கத்தில் இருக்கிறதாம் மேயர் தரப்பு.
ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ‘2 கோடி உறுப்பினர்களைக்கொண்ட பேரியக்கம் இலைக் கட்சி’ என்று அறிவிக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறார் துணிவானவர். ஆனால், தன் இழுப்புக்குச் சில மா.செ-க்கள் ஒத்துழைக்காததால், ஜூன் மாதத்தில் நடைபெற்ற மா.செ கூட்டத்தில் அவர்களை வறுத்தெடுத்திருந்தார் அவர். அதன் விளைவாக, ‘எங்கே பதவி பறிபோய்விடுமோ?’ என்ற அச்சத்தில், கல்லூரிகள், பஸ் ஸ்டாண்டுக்கெல்லாம் போய் உறுப்பினர்களைச் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் சில வெளியூர் மா.செ-க்கள். ஆனால், சென்னையிலுள்ள மா.செ-க்கள் மட்டும், ‘நமக்கு என்ன வந்தது?’ என்று ரொம்பவே மெத்தனமாக இருப்பதாகத் துணிவானவருக்கு `நோட்’ சென்றிருக்கிறது. கடும் கோபமடைந்த துணிவுப் புள்ளி, சென்னை மா.செ-க்களில் ஒரு சிலரை மாற்றி அதிர்ச்சி கொடுக்கத் தயாராகிவருகிறாராம்!
மேலிடத்து ‘மாப்பிள்ளை’யின் தந்தை, சமீபத்தில் பழநி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்திருக்கிறார். மலைக்கோயில் அடிவாரத்திலுள்ள புலிப்பாணி ஆசிரமத்துக்குச் சென்று ஜீவசமாதியை வழிபட்டதோடு, சிவானந்த புலிப்பாணி சுவாமிகளிடம் ஆசிபெற்றும் சென்றிருக்கிறார்.
தன்னைச் சந்திக்க விரும்பிய உள்ளூர் தி.மு.க-வினர் யாரையும் அவர் சந்திக்க அனுமதிக்கவில்லையாம். ஏனிந்த திடீர் தரிசனம் என்று விசாரித்தால், ‘ஜீவசமாதிகளுக்குச் சென்று வழிபட்டால் எப்பேர்பட்ட பிரச்னைகளிலிருந்தும் மீண்டுவிடலாம் என ஜோதிடர்கள் சொன்ன அறிவுரையே மேலிடத்து சம்பந்தியின் பழநி விசிட்டுக்குக் காரணம்” என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.
from Tamilnadu News https://ift.tt/QTeRlz7
