பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு தற்போது மருத்துவமனையில் நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்ட காவலில் இருக்கிறார். இன்னொரு பக்கம், இவர் கவனித்து வந்த துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்துவருகிறார்.

இப்படியான சூழலில், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆளுநரின் இத்தகைய செயலைக் கண்டித்த முதல்வர் ஸ்டாலின், “அமைச்சரைப் பதவிநீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், `தம்பி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் செய்திருப்பது அதிகார முறைகேடு’ என்று எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், `அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிவித்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தான்தோன்றித்தனமான செயல்பாடு யதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்டு, அமைக்கப்பட்டிருக்கும் மாநில அரசின் அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு எனும் மரபைத் தகர்த்து, அரசின் நிர்வாகத்தில் அத்துமீறி தலையிட்டு, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்திருக்கும் ஆளுநரின் முடிவு எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல.

செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகள் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதிலோ, சட்டத்தின்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலோ மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதைக் காரணமாகக் காட்டி, மாநில அரசின் இறையாண்மைமீது தாக்குதல் தொடுக்கும் ஆளுநரின் அட்டூழியப்போக்கை ஒருபோதும் ஏற்க முடியாது. சட்டத்தின்படி, செந்தில் பாலாஜியை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும். தார்மீகக்கோட்பாட்டின்படி, மக்கள் தேர்தல் களத்தில் தோற்கடித்து, தண்டிக்க வேண்டும்.

இதற்கிடையே, ஆளுநர் இதை வைத்து அரசியல் செய்ய முயல்வதும், அரசின் நிர்வாக முடிவை மாற்றி அமைக்க முற்படுவதும் அப்பட்டமான சட்டவிரோதமாகும். தம்பி பேரறிவாளன் விடுதலை வழக்கில், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் எனக் கூறி, மாநிலத் தன்னுரிமையை நிலைநாட்டியிருக்கும் நிலையில், அதற்கு மாறாக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கும் ஆளுநரின் முடிவு சனநாயக முறைமைக்கும், மாநிலத் தன்னாட்சிக்கும் எதிரானது. தம்பி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் செய்திருப்பது அதிகார முறைகேடு. அதற்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன்” என்று சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/EJfHVCw
