பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையில் கைதான தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறே நீதிமன்ற காவலில் இருக்கும் சூழலில், அவரை அமைச்சர் பதவியிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றிரவு நீக்கி உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசியல் பேசுபொருளானது.

செந்தில் பாலாஜி – ஆளுநர் ஆர்.என்.ரவி

இதற்கு தொடர்ச்சியாக கடும் கண்டனங்கள் வந்தவண்ணம் இருக்கவே அடுத்த சில மணிநேரத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திவைத்தார்.

இருப்பினும் மாநில அரசின் விவகாரத்தில் ஆளுநர் இவ்வாறு செயல்படுவது கண்டிக்கத்தக்கது, அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தொடர்ந்து எதிர்ப்புக்கள் வந்தவண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவர் உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி-யுமான மணீஷ் திவாரி தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி

இது தொடர்பாக ஊடகமொன்றில் பேசிய காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி, “ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய அதிகார வரம்பைப் பற்றி அறியாதவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான இத்தகைய நடவடிக்கையை அவர் எடுத்திருக்கக் கூடாது. அவரின் இத்தகைய செயல், அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய போதுமான அறிவு அவருக்கு இல்லை என்பதையும், தன்னுடைய பொறுப்புகளைப் பற்றி அறியாதவர் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. எனவே ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

from Tamilnadu News https://ift.tt/aTvem0R