சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகிய நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், அந்தக் குழந்தையின் கை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. குழந்தையின் இந்த நிலைக்கு செவிலியர்களின் அலட்சியம்தான் காரணம் எனக் குழந்தையின் பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதைத் தொடர்ந்து, குழந்தையின் பெற்றோரைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதா என்பதை விசாரிக்க மூன்று துறைகளின் மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

அந்தக் குழு இன்று விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய குழந்தையின் தாய் அஜீஸா, “குழந்தைக்கு கையில் போடப்பட்ட ட்ரிப் ஊசியின் காரணமாகத்தான் கை அழுகும் சூழல் ஏற்பட்டது. குழந்தையின் கை நிறம் மாறுவதைக் கவனித்தவுடனே நான் செவிலியர்களிடம் கூறினேன். ஒருவேளை அப்போதே அந்த ஊசி அகற்றப்பட்டிருந்தால் என் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து இன்றுதான் விசாரணையை என்னிடமிருந்து தொடங்கியிருக்கிறார்கள். என்னிடம் விசாரித்த வகையில் விசாரணை திருப்திகரமாக இருந்தது. என்னுடைய குழந்தைக்கு ஏற்பட்டது போன்ற நிலை மற்றொருவருக்கு ஏற்படக் கூடாது. தமிழ்நாடு அரசு எங்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும். அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்னிடம் பலமுறை ‘குறை மாதக் குழந்தை. பல பிரச்னைகள் குழந்தைக்கு இருந்தது’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

மா.சுப்பிரமணியன்

என் குழந்தை குறைமாதத்தில் பிறந்த குழந்தைதான். ஆனால் அதைத் திரும்பத் திரும்பக் கூறியதை எந்தத் தாயாலும் தாங்கிக்கொள்ள முடியாது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயன்படுத்திய அந்த வார்த்தையைக் கேட்டு நான் உடைந்துவிட்டேன். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் நன்றாக இருப்பதில்லையா… நான் இரண்டு கைகளுடனும், இரண்டு கால்களுடனும் என் குழந்தையைக் கொண்டுவந்தேன். இப்போது ஒரு கை மட்டுமே அவனுக்கு இருக்கிறது. குறைபாடுடைய குழந்தை எனக் கூறும் அமைச்சர், என் குழந்தையை மாற்றுத்திறனாளியாக்கியிருப்பதற்கு என்ன பதில் சொல்வார். விசாரணை நேர்மையாக நடந்து, எங்களுக்கு நீதி கிடைத்தால்போதும்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/eIRLWUo