நீண்ட நாள்களாக ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்துவந்தது. ஒருவழியாக அது கடந்த 2014-ம் ஆண்டு நிறைவேறியது. இதையடுத்து அந்த மாநிலத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார், சந்திரசேகர் ராவ்.

இவரின் வெற்றி கடந்த தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனால், இந்த முறை களம் அவ்வளவு எளிதாக இல்லை என்கிறார்கள், விவரமறிந்தவர்கள். இதற்கு முக்கியக் காரணமாக பி.ஆர்.எஸ் கட்சிக்கு எதிரான தங்களது பிரசாரத்தைத் தீவிரமாக, காங்கிரஸும் பா.ஜ.க-வும் முடுக்கிவிட்டிருப்பது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பி.ஆர்.எஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்.பி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட 35 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார்கள். இதற்கிடையில் கடந்த 2-ம் தேதி தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய ராகுல், “பா.ஜ.க ரிஷ்தேதார் சமிதி போன்றதுதான் பி.ஆர்.எஸ் கட்சி. தெலங்கானா மாநிலம் தன்னுடைய ராஜ்ஜியம் என்றும், அதற்கு தான்தான் ராஜா என்றும் கே.சி.ஆர் நினைத்துக்கொண்டிருக்கிறார். உண்மையில் பா.ஜ.க-வின் `பி’ டீம் தான் பி.ஆர்.எஸ் கட்சி.
கே.சி.ஆரின் ரிமோட் கன்ட்ரோல் பிரதமர் மோடியிடம் இருக்கிறது. சமீபத்தில் கர்நாடகாவில் ஏழைகளுக்கு எதிரான அரசாங்கத்துக்கு எதிராக காங்கிரஸ் போராடியது. ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர்களின் ஆதரவுடன் அவர்களைத் தோற்கடித்தது. அடுத்து தெலங்கானாவிலும் அதே போன்று நடக்கப்போகிறது.

கர்நாடகாவில் என்ன நடந்ததோ, அது தெலங்கானாவிலும் தொடரும். முன்பு தெலங்கானாவில், பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் என மும்முனைப் போட்டி என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் மட்டும்தான். பா.ஜ.க பஞ்சராகிவிட்டது. பாட்னாவில் நடத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பி.ஆர்.எஸ் கலந்துகொண்டால், நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர்களிடம் முன்பே கூறிவிட்டோம். பி.ஆர்.எஸ்-ஸுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம்” என்றார்.
ஏற்கெனவே ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, முக்கிய நிர்வாகிகள் விலகலால் ஆட்டம் கண்டிருக்கும் கே.சி.ஆரின் அஸ்திவாரம், தற்போது ராகுல் காந்தியின் பேச்சால் பேரிடியாக விழுந்திருக்கிறது. இதற்கிடையில் தெலங்கானா அரசியலில் புதிய ட்விஸ்ட்டாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளாவும் காங்கிரஸில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கெனவே கே.சி.ஆருக்கு எதிராக `ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா’ என்ற கட்சியைத் தொடங்கியிருக்கும் ஒய்.எஸ்.ஷர்மிளா, பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறார். இதற்கிடையில் ஷர்மிளா காங்கிரஸில் இணையக்கூடும் என்று வெளியாகியிருக்கும் தகவல், கே.சி.ஆருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது. இந்தச் செய்தி தெலங்கானா மாநில அரசியலில் பரபரப்புத் தீயைப் பற்றவைத்திருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், “ராகுல் காந்தியின் `பாரத் ஜோடோ யாத்திரை’க்குப் பிறகு அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதை நாம் சமீபத்தில் நடந்த கர்நாடகத் தேர்தலில் கண்கூடாகப் பார்த்தோம். அந்த மாநில தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து தெலங்கானாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறோம். பி.ஆர்.எஸ்-ஸிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்.பி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட 35 பேர் காங்கிரஸில் இணைந்திருக்கிறார்கள். இது தவிர ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளாவிடம், அவரது கட்சியை காங்கிரஸுடன் இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்.
இதில் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. அவருடைய தந்தை ராஜசேகர ரெட்டி உயிருடன் இருந்தபோது, ராகுல் காந்திதான் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். எனவே, காங்கிரஸ் கட்சிக்கு ஷர்மிளா வந்த பிறகு, தனது தந்தையின் ஆசை குறித்து மக்களிடம் பேசினால், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். மேலும், ஆந்திரா அரசியலிலும் இது எதிரொலிக்கும்.

ராகுல் காந்தி தெலங்கானாவுக்கு வந்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. கட்சியினரும் தேர்தல் வெற்றிக்காக உற்சாகத்துடன் வேலை செய்துவருகிறார்கள். மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. தெலங்கானாவில் ஆட்சியைப் பிடித்துவிட்டால், அது நிச்சயம் ஆந்திராவில் வெற்றிபெறுவதற்கும் காங்கிரஸுக்குக் கைகொடுக்கும்.
மேலும், ஆளுங்கட்சி நிறைவேற்றாத திட்டங்கள், முறைகேடுகள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் பேசிவருகிறோம். இதுவும் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மூத்த குடிமக்களுக்கு ரூ.4,000 வழங்கும் திட்டம், கணவனை இழந்தவர்கள், பீடி தயாரிக்கும் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், தினக்கூலிகள் போன்றவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கவிருக்கிறோம்.

மேலும், கர்நாடகத் தேர்தல் வெற்றியில் முக்கியப் பங்காற்றிய காங்கிரஸ் தலைவர் சுனில் கனுகோலு, தெலங்கானாவில் களமிறக்கப்பட்டிருக்கிறார். அவர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டார்” என்றார்.
இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “காங்கிரஸில் கிருஷ்ணா ராவ், ஸ்ரீனிவாஸ் ரெட்டி இணைந்த பிறகு பாதயாத்திரை நடத்தப்பட்டது.
இறுதியாக யாத்திரை முடியும்போது நடந்த கூட்டத்தில்தான் ராகுல் கலந்துகொணடார். அதில் மிகப்பெரிய மக்கள் கூட்டம் கூடியது. அப்போதுதான் ராகுல், ” பா.ஜ.க-வின் `பி’ டீம்தான் பி.ஆர்.எஸ் கட்சி. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பி.ஆர்.எஸ்-ஸுக்கு இனி இடம் கிடையாது” என்றும் தெரிவித்திருக்கிறார். தெலங்கானாவில் சில பகுதிகளில் பா.ஜ.க., இந்துத்துவா பிரசாரத்தின் மூலம் செல்வாக்குடன் இருக்கிறார்கள்.

புறநகர்ப் பகுதிகளில் போட்டி காங்கிரஸ் – பி.ஆர்.எஸ் இரண்டுக்குமிடையேதான் இருக்கிறது. 2024-ம் ஆண்டு தேர்தல் வருகிறது. அதில் காங்கிரஸ் – பிஆர்எஸ்-ஸுக்கிடையே கடுமையான போட்டி இருக்கும். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டால், தெலங்கானாவிலும் அந்தக் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அந்த மாநிலத்தில் பி.ஆர்.எஸ்-ஸும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திருக்கிறது.
மேலும் கே.சி.ஆர்., சில மாதங்களுக்கு முன்பு வரை மோடி, அமித் ஷாவை நேரடியாகத் தாக்கிப் பேசினார். ஆனால், தன்னுடைய மகள் கவிதா அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியதும் அடக்கி வாசித்துவருகிறார். வெளி மாநில விஷயங்கள், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை போன்றவை குறித்துப் பேசுவதில்லை. அவர்மீதும் ஏராளமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. காங்கிரஸில் ஷர்மிளா இணைந்தால், அந்தக் கட்சிக்கு அது கூடுதல் பலத்தைக் கொடுக்கும்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/214oy9j
