அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைப்பெற்றது. அதில், மதுரையில் அ.தி.மு.க-வின் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க-வின் உறுப்பினர் சேர்க்கை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும்.

அதன் அடிப்படையில் 2018-க்குப் பிறகு இந்த ஆண்டு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மாவட்ட செயலாளர்கள், தொண்டர்களின் பெரும் முயற்சியால் அ.தி.மு.க-வின் தொண்டர்கள் எண்ணிக்கை 1.60 கோடியாக அதிகரித்திருக்கிறது. அ.தி.மு.க உடைந்து விட்டது, சிதறிவிட்டது எனப் பேசியவர்களுக்கும், அ.தி.மு.க-வை ஆளும் கட்சியுடன் சேர்ந்து அழிக்க நினைத்த சக்திகளுக்கும் தொண்டர்களின் எண்ணிக்கையின் மூலம் பதிலளிக்கப்பட்டிருக்கிறது. யாராலும் அ.தி.மு.க-வை எதுவும் செய்யமுடியாது. காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் நாடகமாடிக்கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் காவிரி நீருக்காக சட்டப்போராட்டம் நடத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனது தலைமையிலான அ.தி.மு.க அரசு தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்தி உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றோம். உச்ச நீதிமன்றம் வலியுறுத்திய தீர்ப்பை செயல்படுத்த வேண்டுமென அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 நாள்கள் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பினர். அதன் பிறகே காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இந்தியா முழுவதையும் ஒருங்கிணைப்பதாகக் கூறும் முதல்வர் ஸ்டாலின், காவிரி நீர் விவகாரம் குறித்து கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிடம் வலியுறுத்தியிருக்கலாமே…

காங்கிரஸ், அமைதியாக இருக்கும் கர்நாடக மாநிலத்தின் அமைதியை குலைக்கும் செயலாகவே இதைப் பார்க்கிறோம். மேலும், இதை வன்மையாக கண்டிக்கிறோம். அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவத்துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தோம். ஆனால் தற்போது நான்காவது இடத்துக்கு சென்றிருக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி மட்டும்தான் கொடுக்கிறார். இரண்டு ஆண்டுகளாக மருத்துவத்துறையை சீரழித்துவிட்டார்.
சமீபத்தில் குழந்தையின் கை அகற்றப்பட்ட சம்பவம், கடலூரில் சளித் தொல்லை என வந்தவர்களுக்கு நாய்கடிக்கான ஊசி போடப்பட்டது உள்ளிட்ட தொடர் குளறுபடிகள் அரங்கேறுகிறது. திராவிட மாடல் ஆட்சி எனச் சொல்லிக்கொள்பவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் மூன்று மருத்துவக் கல்லூரிகளை மூடியிருக்கிறார்கள். இதனால் 500 மருத்து மாணவர்களின் சேர்க்கை தடைப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனைக்காக மருந்து வாங்குவதில் கூட குளறுபடி நடக்கிறது.

இனிமேலாவது கும்பகர்ண தூக்கத்திலிருந்து தி.மு.க அரசு விழிக்க வேண்டும். அடிப்படை மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவைபடும் உணவுப் பொருள்களின் விலை 70 சதவிகிதம் கூடிவிட்டது. ஆனால், தி.மு.க அமைச்சர்கள் மாமன்னன் படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். படத்தில் என்னவேண்டுமானாலும் காண்பிக்கலாம். ஆனால், நான் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டபிறகு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
அப்போது சபாநாயகராக இருந்த பட்டியலிடத்தைச் சேர்ந்த தனபால் சட்டமன்றத்தைக் கூட்டினார். அதற்காக அவரை அவரது இருக்கையிலிருந்து இழுத்து கீழே தள்ளி, அவரது மைக்கை உடைத்து, அவரது இருக்கையில் அமர்ந்ததும், அவர்மீதே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்ததும் தி.மு.க-தான் என்பதை மறந்துவிடவேண்டாம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி தொடரும்” எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், பா.ஜ.க-வின் பொது சிவில் சட்டம் அமல்படுத்தும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “எங்கள் தேர்தல் வாக்குறுதியில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்திருக்கிறோம். அதைப் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்” என பதிலளித்திருந்தார்.
அ.தி.மு.க-வின் 2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில், “இந்தியாவின் சிறுபான்மையினரின் மத உரிமைகளை மோசமாக பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட அரசியல் சட்டத்தில் எந்த திருத்தமும் கொண்டு வர வேண்டாம் என இந்திய அரசை அ.தி.மு.க வலியுறுத்தும்” எனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
from Tamilnadu News https://ift.tt/JTdnjH6
