மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு தேர்தல் பிரசாரத்தின் போதெல்லாம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பேசி வருகிறது. அண்மையில் பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் தொடர்பாக பேசியது இந்திய அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

துணைக்குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்

இந்த சட்டத்துக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ‘பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது’ எனப் பேசியிருக்கிறார். அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாத்தியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் பல்கலைக் கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அவர், “இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள், நாட்டின் நிர்வாக கோட்பாடுகளின் கொள்கைகள் அடிப்படையானவை என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள்.

எனவேதான் சட்ட வடிவமைப்பில் இந்தக் கொள்கைகள் பிரதிபலிப்பதை நம்மால் காண முடியும். அதனால்தான் அரசியலமைப்பின் 44-வது பிரிவு ‘நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ எனத் தெளிவாகக் கூறுகிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சிந்தனையாளர்களின் சிந்தனையை செயல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இதை அமல் படுத்துவதற்கு இனி எந்தக்காரணமும் தடையாக இருக்க முடியாது.

துணைக்குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்

அதன் காரணமாகவே, அரசு நமது நாட்டின் சிந்தனையாளர்களைப் பின்பற்றி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கிறது. ஆனால், சிலர் இதை எதிர்ப்பதைப் பார்ப்பதற்கு திகைப்பாக இருக்கிறது. அவர்கள் அரசியலுக்காக தேசத்தை விலையாக கொடுக்க முடியாது. மதங்கள், பழக்கவழக்கங்கள், மரபுகள், ஜாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்களை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டத்தை இயற்றுவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம். இதன் மூலம், தனிநபர் சட்டங்கள் ஒரு பொதுவான சட்டத்தின் மூலம் உள்ளடக்கப்படும்.

இது நாட்டை மிகவும் திறம்பட பிணைக்கும் என்பதால், இதன் அடிப்படையான விழுமியத்தை புரிந்துக் கொண்டு பாராட்ட வேண்டும். பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால், அது நமது மதிப்புகளை சிதைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் தாங்கள் விரும்பும் அரசியலை செய்யட்டும். ஆனால் தேசியவாதத்திற்கான ஒரு மரியாதை அனைவரிடமும் இருக்க வேண்டும்.

துணைக்குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்

உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்குப் பெயர்போன பழமையான, துடிப்பான ஜனநாயக நாடு இந்தியா. இந்தியாவில் ஊழல் செய்தவர்களுக்கு சட்டத்தின் கை மிகக் கடினமானது எனத் தெரியும். அதனால்தான் நீதிமன்றத்தை நாடாமல் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். எனவே நீங்கள் பகுத்தறியும் திறனை வளர்த்துக்கொண்டு, எது சரி எது தவறு என்பதை உணர்ந்து குரல் கொடுங்கள். ஏனெனில் இது நீங்கள் தேசத்துக்கு செய்யும் மிக பெரிய உதவி” எனத் தெரிவித்திருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/06jtVZ1