கோவை குனியமுத்தூர் அருகில் உள்ள கிருஷ்ணா கல்லூரி சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 5 புலம்பெயர் தொழிலாளிகள் பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து சைட் இன்ஜினியர் சாகுல், கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன், மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகிய 3 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆய்வு

முன்னதாக நேற்று இரவு சம்பவ இடத்தை  கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது மேயர் கல்பனா, கிருஷ்ணா கல்லூரி நிர்வாக அறங்காவலர் மலர்விழியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். “நாங்கள் எல்லோரும் சம்பவ இடத்தில் இருக்கிறோம். நீங்கள் யாருமே இல்லையே?” என கேட்டார். ஆனால் கல்பனாவுக்கு முறையாக பதிலளிக்காமல் மலர்விழி செல்போனை துண்டித்துவிட்டார் எனச் சொல்லப்படுகிறது.

கல்பனா

இதுகுறித்து மேயர் கல்பனா செய்தியாளர்களிடம் கூறுகையில், “கிருஷ்ணா கல்லூரி நிர்வாக அறங்காவலரை தொடர்பு கொண்டதற்கு, ‘ஒப்பந்ததாரர் தான் பொறுப்பு.’ என்று சொல்லி போனை துண்டித்துவிட்டார்.

முறையான அனுமதியுடன் கட்டியிருக்கிறார்களா என்று அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்வோம். இவ்வளவு பெரிய பிரச்னைக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.” என்றார்.  துணைமேயர் வெற்றிசெல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தக் கல்வி நிறுவனம் சுற்றுவட்டாரம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது.

மலர்விழி

நீர்நிலையை ஆக்கிரமித்துதான் கட்டியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பே அதை சரிசெய்ய சொல்லி கல்லூரி நிர்வாகத்தை எச்சரித்தோம். அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.” என்று கூறியுள்ளார்.

from Tamilnadu News https://ift.tt/pZKDcuI