சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதற்கிடையே செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக கைது செய்ததாக கூறி, அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மேகலா தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று (ஜூலை 4) இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பளித்தது.

நீதிபதி நிஷா பானு தீர்ப்பு விவரம்:
செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றும், சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் விசாரணைக் காவல் கோர அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், அமைச்சர் செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை இருந்த காலத்தை விசாரணைக் காவல் நாள்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தும் அவர் உத்தரவிட்டார்.
நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பு விவரம்:
மற்றொரு நீதிபதி பரத சக்கரவரத்தியோ, மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தீர்ப்பளித்தார். கைதோ அல்லது தடுத்து வைக்கப்பட்டிருப்பதோ சட்டவிரோதமாக இல்லாத பட்சத்தில் இதுபோன்ற ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கைப் பொருத்தவரை, நீதிமன்ற காவலை சட்ட விரோதமானது எனறு மனுதாரர் கோரவில்லை என்பதால் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அவர் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டது முதலே மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு நாள் கூட அமலாக்கத்துறை காவலில் இருந்ததே இல்லை என்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருந்த காலத்தை விட்டுவிட்டே, அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் நாள்களை கணக்கிட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜூன் 14 முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் வரையிலான கால கட்டத்தை அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் நாள்களில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொர்ணர்வு மனுவுக்கு எதிராகவும், செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதற்கு எதிராகவும் அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், ‘செந்தில் பாலாஜி செல்வாக்கு மிக்க நபர்; அவரிடம் விசாரணையை தாமதப்படுத்தப்பட்டால் விசாரணை நீர்த்து போகும். கடுமையான ஆதார அழிப்பு நடக்கிறது. தினமும் நடக்கிறது. காலம் தாழ்த்தும் ஒவ்வொரு மணித்துளியும் வழக்கை நீர்த்து போக செய்யும்’ என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, ஆட்கொணர்வு வழக்கை வெகு விரைவில் மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பி, மெரிட் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ அறிவுறுத்தினர்.
அடுத்து என்ன?
மாறுபட்ட தீர்ப்புகள் வந்துள்ள நிலையில் இனி அடுத்து என்ன என்பது குறித்து வழக்கறிஞர் அகிலன் அப்ரார் நம்மிடம் பேசும் போது, “அரசியலமைப்பு சட்டத்தின் பார்பட்ட பட்டியலில் குறிப்பிட்ட சில பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தண்டனைக்குரிய குற்றங்கள் scheduled offence என்று அழைக்கப்படுகிறது. அதபடி 420, 120b- ஆகிய பிரிவுகள் scheduled offence கீழ் வருகிறது. அதனால்தான் இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறது. உயர் நீதிமன்றம் சரியாக ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கவில்லை என்றுதான் அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றம் செல்கிறார்கள்.

இப்போது மாறுபட்ட தீர்ப்பில், நிஷா பானு அளித்த தீர்ப்பில் போதுமான விளக்கம் இல்லை. ஆனால், பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பு உரிய விளக்கங்களுடன் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தலைமை நீதிபதிக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவர் மூன்றாவது நீதிபதியை நியமித்துள்ளார். அவர் அளிக்கும் தீர்ப்பை பொறுத்தே உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடுத்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும். அதேநேரத்தில் அமலாக்கத்துறை கஸ்டடி கேட்டு தனிமனுவை தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அதுவரை இப்போது உள்ள நிலையே தொடரும். எனவே செந்தில் பாலாஜி மருத்துவமனையிலோ அல்லது உடல் நலம் சரியானால் சிறையிலேயேத்தான் இருக்க வேண்டும்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/QOJgyvW
