கிரிக்கெட் வீரர் மொகமத் ஷமிக்கும் அவரின் மனைவி ஹசின் ஜஹனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். தன் கணவர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம், ஹசின் புகார் கொடுத்திருந்தார்.
அதோடு தன் கணவருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாகவும், வேறு பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார். இப்பிரச்னை இந்திய கிரிக்கெட் வாரியம் வரை சென்றது. ஷமி தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்து இருந்தார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஹசின் தொடர்ந்த வழக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள தெற்கு பர்கனாஸ் மாவட்டம் அலிபோர் நகர கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் நீதிபதி, கிரிக்கெட் வீரர் மொகமத் ஷமிக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி வாரன்ட் பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மொகமத் ஷமி செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் மொகமத் ஷமிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட வாரன்டிற்கு 2019-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி வரை தடை விதித்துள்ளது. இத்தடை கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அப்படியே கிடப்பில் இருந்து வருகிறது.
இதையடுத்து இவ்வழக்கு விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிடவேண்டும் என்று கோரி, ஹசின் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் இறுதியில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ’வழக்கு 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. வாரன்டிற்கு தடை விதிக்கப்பட்ட பிறகு அனைத்து விசாரணைகளும் நிறுத்தி வைக்கப்படுவதில் எந்த வித நியாயமும் கிடையாது.

எனவே மனுதாரரின் மனுவை செசன்ஸ் கோர்ட் ஒரு மாதத்திற்குள் விசாரித்து முடிக்கவேண்டும்’ என்று உத்தரவிடுவதாகக் குறிப்பிட்டனர். மேலும் பணிச் சுமை காரணமாக அது முடியாத பட்சத்தில், விதிக்கப்பட்டு இருக்கும் தடையை விலக்கி அல்லது மாறுதல் செய்து உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று செசன்ஸ் கோர்ட்டிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
from Tamilnadu News https://ift.tt/IvplOU4
