மகாராஷ்டிராவில் புதிய திருப்பமாக சிவசேனா-பா.ஜ.க கூட்டணி அரசில், மூன்றாவது அணியாக அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வந்து சேர்ந்து கொண்டது. அஜித் பவார் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் வருகையால் சிவசேனாவில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சிவசேனாவைச் சேர்ந்த 10 பேர் அமைச்சர்களாக இருக்கும் நிலையில் மேலும் சிலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று முதல்வர் ஷிண்டே உத்தரவாதம் கொடுத்திருந்தார். அந்த ஆசையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஆனால் அஜித் பவார் வருகையால் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது என்ற அதிருப்தியில் இருக்கின்றனர். சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது அதிருப்தியை நேரடியாகவே வெளிப்படுத்திவிட்டனர். அமைச்சர் பதவி கிடைக்காத சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஓரணியில் திரண்டிருக்கின்றனர்.

அவர்களில் சிலர் மீண்டும் உத்தவ் தாக்கரேயிடமே சென்றுவிடலாம் என்ற ஆலோசனையில் இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. இதனால் நேற்று முன் தினம் முதல்வர் ஷிண்டே தனது அரசு இல்லத்திற்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் போது சிவசேனாவுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று கூறி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தினார்.

முதல்வர் ஷிண்டேயும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இது குறித்து நேற்றும் ஆலோசனை நடத்தினார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து நேற்று இரவு துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவசரமாக முதல்வர் ஷிண்டேயுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டம் அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. இதில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்தும், அதில் சிவசேனாவுக்கு எத்தனை பதவிகள் கொடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

எங்களுக்குள் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை என்றும், முதல்வர் ஷிண்டே மீது அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், சிவசேனா தலைவர்களில் ஒருவரான உதய் சாவந்த் தெரிவித்தார். முதல்வர் ஷிண்டேயும் எங்களது அரசுக்கு 200-க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும், இப்போது அஜித் பவார் வருகையால் மேலும் வலுவடைந்திருப்பதாக தெரிவித்தார். ஆனால் இது குறித்து சுயேச்சை எம்.எல்.ஏ.பச்சு காடு, “சிவசேனாவில் இருந்து வெளியேறி வந்த 40 எம்.எல்.ஏ.க்களும் இப்போது தவறு செய்து விட்டதாக உணர்கின்றனர். மகாவிகாஸ் அகாடியில் இருந்த போதும் அஜித் பவார் பிரச்னையை உருவாக்கினார். இப்போது மீண்டும் பிரச்னையை உருவாக்குவார்.

பா.ஜ.க. கூட்டணிக்கட்சிகளைப்பற்றி கவலைப்படவில்லை. சொந்தக்கட்சியை வலுப்படுத்தவேண்டும் என்று மட்டுமே விரும்புகிறது. கூட்டணிக்கு வருபவர்கள் பள்ளத்தில் விழுந்தாலும் செத்தாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. மக்களவை தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று மட்டும் பா.ஜ.க. இருகிறது. சிவசேனா அதிருப்தியாளர்கள் இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தது தவறு என்று நினைக்கின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார். ஷிண்டேயின் சிவசேனா கட்சி கொறடாவான பரத் கோகாவாலா தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு இன்னும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

சரத் பவார்

அதோடு அவரது பரம அரசியல் எதிரியான சுனில் தட்கரேயின் மகள் அதிதி தட்கரே அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இது அவரை மேலும் கோபமாக்கி இருக்கிறது. சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத் அளித்தப் பேட்டியில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். சில எம்.எல்.ஏ.க்கள் மாதோஸ்ரீ தங்களை அனுகினால் சாதகமான பதில் கொடுப்போம் என்று தெரிவித்திருக்கின்றனர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்று டெல்லியில் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அஜித் பவார் உட்பட 12 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் இக்கூட்டத்தை சட்டவிரோதமானது என்று அஜித் பவார் அறிவித்திருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/3VeE2Gg