பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய அறுவைசிகிச்சையை முடித்துவிட்டு தற்போது மருத்துவமனையிலேயே நீதிமன்ற காவலில் இருக்கிறார். இதற்கிடையில், செந்தில் பாலாஜி கவனித்துவந்த துறைகள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு மாற்றப்பட்டது. அதோடு இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காததையடுத்து, தமிழக அரசே செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என கடந்த ஜூன் 16-ம் தேதி அரசாணை வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல, செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி கொளத்தூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், அ.தி.மு.க முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் ஆகியோர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ (Quo Warranto) வழக்குகளையும் தாக்கல் செய்திருந்தனர்.
இத்தகைய சூழலில் தான் கடந்த ஜூன் 29-ம் தேதி மாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்த ஆளுநர் ஆர்.ரன்.ரவி, அடுத்த சில மணிநேரங்களிலேயே மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரவை நிறுத்திவைத்து, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினர். அதோடு, செந்தில் பாலாஜி பதவி நீக்கம் குறித்து அட்டர்னி ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கலந்தாலோசிப்பதாகவும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறிருக்க, எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்திருக்கும் புதிய மனுவில், `அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்திவைத்த தமிழக ஆளுநர் ரவியின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும். அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் எடுத்த முடிவை, மறுபரிசீனை செய்ய முடியாது. நீதிமன்றம் தான் அதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும். ஆளுநர் முடிவு எடுத்த பிறகு, வேறு யாருடனும் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் எம்.எல்.ரவி தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் ன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, `அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ள போதும், அந்த உத்தரவை நிறுத்தி வைக்க அதிகாரமில்லை’ என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுதாரர் தரப்பை கேள்வியெழுப்பிய நீதிமன்ற அமர்வு, `ஆளுநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா… அத்தகைய தீர்ப்பு ஏதேனும் உள்ளதா… அவ்வாறு இருந்தால் அதனை தாக்கல் செய்யவும்‘ மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.

அப்போது, `செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராக நீடிக்கிறார்’ என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட போது, `இதனால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, `அதற்கு மக்கள் வரிப்பணத்தில் அவருக்கு ஊதியம் வழங்கப்படுவதாக’ மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க. `அவர் எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறாரே’ என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இதேபோல, செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கோரிய ஜெ.ஜெயவர்த்தன், எம்.எல்.ரவி, ராமச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த கோ வாரண்டோ வழக்குகளின் விசாரணையையும் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.
from Tamilnadu News https://ift.tt/kfER73O
