தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற அனுப்பிய கோப்பு ஆளுநர் மாளிகையில் அனுமதி அளிக்காமல் வைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, அமைச்சர் ரகுபதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகைக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு, ஆளுநர் தனது பதிலை பத்திரிகை செய்தி மூலமாக தெரிவித்திருக்கிறார்.
ஆளுநரின் இந்த பத்திரிகை செய்தி குறிப்பு குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் ஆளுநர் மாளிகையில் இருந்து வரவில்லை. பத்திரிகை செய்தி தான் வந்திருக்கிறது.

அதில், லீகல் இன்வர்ஸ்டிகேசன் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அதாவது அ.தி.மு.கவின் இரண்டு முன்னாள் அமைச்சர்களை ஆளுநர் காப்பாற்ற நினைக்கிறார்.
12.9.22 அன்று முன்னாள் அமைச்சர்கள் குறித்த புகாரை நாங்கள் அனுப்பி இருந்தோம். ஆனால், ஆளுநர் அதற்கான முறையான பதிலைத் தராமல் மழுப்பலாக பதில் கூறியுள்ளார். ஆளுநர் மாளிகையிலிருந்தே உண்மைக்கு புறம்பான தகவல் வெளிவருகிறது. தி.மு.க-வுக்கு அவர் தான் எதிர்க்கட்சி போல் செயல்பட்டு வருகிறார்,
குறிப்பாக ஆளுநர் இரட்டை வேடம் போடுகிறார், ஒருபுறம் நடவடிக்கை எடுக்க தடையாகவும் தி.மு.க மீது நடவடிக்கை எடுக்கும்படியும் செயல்பட்டு தி.மு.கவை அஞ்ச வைக்கலாம் என்று அவர் எண்ணுகிறார். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எதற்கும் அஞ்ச மாட்டார்.
ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் மத்திய அரசிடம் தான் தெரிவிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இந்த விவகாரத்தில் உள்ளது. ஆளுநர் மாளிகையிலிருந்து வெளிவந்துள்ள பத்திரிகை செய்தி உண்மைக்கு புறம்பானது.
இனியாவது ஆளுநர் மாளிகையில் இருந்து உண்மைக்கு புறம்பான செய்தி வருகிறது என்ற கூற்றை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். கே.சி வீரமணி வழக்கை பொறுத்தவரை 12.09.2022 விசாரணையின் முழு கோப்பையும் ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவருடைய வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று… ஆனால் கோப்பு இதுவரை வரவில்லை என்று ஆளுநர் பொய்யான தகவலை பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

எம்.ஆர் விஜயபாஸ்கர் வழக்கை பொருத்தவரை 12/5/2023 அன்று அரசு இடம் இருந்து கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆளுநர் மாளிகையும் கோப்பில் கையெழுத்து இட்டு பெற்றிருக்கிறது. அதற்கு அரசிடம் ஆதாரம் உள்ளது.
ஆளுநரிடமிருந்து வந்துள்ளது பத்திரிகை செய்திதான். தமிழக அரசிற்கு முறைப்படி ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த விதமான பதில் கோப்பும் இதுவரை சட்டத்துறைக்கு வரவில்லை.
தெலங்கானா, மேற்கு வங்காளாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளனர், நாங்களும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம், முதல்வரின் பொறுமைக்கும் எல்லை உண்டு, இனிமேலும் முதல்வர் பொறுமையாக இருக்க மாட்டார்.” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/4tDoIij
