தமிழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குக் கல்லூரிகள் தொடங்கிவிட்டன. ஆனால், தற்போதுவரை எந்தப் பாடத்திட்டத்தை நடத்துவது என்னும் குழப்பம் பேராசிரியர்கள் மத்தியில் நீடிக்கிறது. இதற்குத் தமிழக அரசு கொண்டுவர முயலும் பொது பாடத்திட்டம்தான் காரணம் எனக் கல்வியாளர்கள் கொந்தளிக்கின்றனர். குறிப்பாக, கல்வியாளர்களிடம் விவாதிக்கப்படாத இந்தப் பாடத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.

பொது பாடத்திட்டம்

தமிழகத்திலுள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒரே பொது பாடத்திட்டத்தை (Common Syllabus) தமிழக அரசு கொண்டுவந்திருக்கிறது. ஆனால், இது உயர்கல்வி கவுன்சில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்காமல் அவசரகதியில் நடைமுறைப்படுத்தப்படுவதால் இதில் குளறுபடிகளுக்குப் பஞ்சமில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால் இதை நடைமுறைப்படுத்த கல்லூரிகள் தயக்கம் காட்டுகின்றன. பழைய பாடத்திட்டம், சம்பந்தமே இல்லாத உள்ளடக்கங்கள், புதிய கல்விக் கொள்கை சாராம்சம் எனப் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் கல்வியாளர்கள். இதற்கிடையில்தான் முதலாம் ஆண்டு வகுப்புகளும் தொடங்கியிருக்கின்றன.

உயர்கல்வி கவுன்சிலிடம் கேட்டால், `அனைத்துப் பல்கலைகழகங்களும் பின்பற்றுகின்றன’ என்கிறது. ஆனால், எந்தப் பல்கலைக்கழகமும் புதிய பொது பாடத்திட்டத்தைக் கண்ணால் பார்க்கக்கூட இல்லை என பகீர் கிளப்புகின்றன.

உயர்கல்வி

இது குறித்து  பேராசிரியர் பா.சிவக்குமார் பேசியதாவது, “மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களை அழைத்து, மாநிலத்தின் கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டத்தை உருவாக்க தமிழகத்தின் உயர்கல்வி மன்றம் வழிகாட்ட வேண்டும்.  ஆனால், அவர்களே பாடத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மத்திய அரசின் பல்கலைக்கழக மாநிலக்குழு,  பாடத்திட்டத்தைத்  திணிப்பதை எப்படி மாநிலக் கல்லூரிகளால் ஏற்க முடியாதோ, அதேபோல் மாநில ’உயர்கல்வி கவுன்சில்’ கொடுக்கும் பாடத்திட்டத்தைப் பின்பற்ற நிர்பந்திப்பதை தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களும் ஏற்காது.

பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாநில அரசு தலையிடுவதை யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால், பாடத்திட்ட வடிவமைப்பிலும் அதிகாரம் செலுத்த முயற்சி செய்வது சரியல்ல. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பாடத்திட்டக்குழு (Board of Members) இருக்கிறது. அவற்றின் அதிகாரத்தைக் கேள்வி எழுப்பும்  நடவடிக்கையைத்தான் மாநில அரசு செய்துவருகிறது. மத்திய அரசு திணிக்க நினைக்கும் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் தமிழக அரசும், அதே அதிகாரத் திணிப்பில்  ஈடுபடுவது முறையல்ல. குறிப்பாக, மொழிப் பாடமான தமிழிலும் இலக்கியங்களுக்கு  எழுதியிருக்கும் விமர்சனப் பாடங்களை இணைக்க எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு பாடத்திலும் சிக்கல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை உடனடியாகப் பல்கலைக்கழகக் குழுக்களை ஒன்றிணைத்து  பாடத்திட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்றார்.

பா.சிவக்குமார்

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொருளாளர் கோபாலகிருஷ்ணன், “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு புதிய பொது பாடத்திட்டத்தை பின்பற்றப்போவதில்லை. சென்ற ஆண்டு பின்பற்ரிய பாடத்திட்டையே இந்த ஆண்டும் பின்பற்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. 25% பாடத்திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம் என டான்சி அடிப்படையில் பழைய பாடத்திட்டத்தைப் பின்பற்றச் சொல்லியிருக்கின்றனர். அவசரமாகப் பாடத்திட்டத்தை அமல்படுத்தவிருக்கின்றனர். ஆனால், இது முற்றிலும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் பேராபத்து” என்றார்.

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வீரமணி, ”‘டான்சி’ கொடுத்ததை பாரதியார் பல்கலைக்கழகம் பின்பற்றவில்லை. இந்த ஆண்டுக்கு அதைப் பின்பற்றப்போவதில்லை என்பதையும் அறிவுறுத்தியிருக்கிறது. இதனால், இதன்கீழ் இயங்கும் கல்லூரிகளும் இந்தப் பொது பாடத்திட்டத்தைப் பின்பற்றவில்லை. பழைய பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றுகின்றன.  இன்னும் டான்சியிடமிருந்து திருத்தப்பட்ட முழுப் பாடத்திட்டம் வந்தடைவில்லை. அவர்கள் கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக வேந்தர்களை அழைத்து, பிரச்னைகளைச் சரிசெய்து வெளியிட வேண்டும். இதைத்தான் தொடக்கம் முதலே சொல்லிவருகிறோம்” என்றார்.

வீரமணி, பேராசிரியர்

இது குறித்து டான்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “ இரண்டு ஆண்டுகள் வல்லுநர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுத்தான் இந்தப் பாடத்திட்டம் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அவசரகதியில் உருவாக்கப்பட்டது என எப்படிச் சொல்ல முடியும்… மேலும், முதலமைச்சர் பல்கலைக்கழகங்கள் புதிய பாடத்திட்டத்தைப் பின்பற்றச் சொன்ன பிறகும் அதைப் பல்கலைக்கழகங்கள் பின்பற்றாமல் இருப்பது சரியா… எங்களிடம் எல்லா பல்கலைக்கழகங்களும் பாடத்திட்டத்திட்டத்தைப் பின்பற்றுவதாகச் சொல்கின்றன. இதில் எந்தச் சிக்கலும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை” என்கிறார்கள்.

ஆனால், உயர்கல்வித்துறையில் இந்தப் பொது பாடத்திட்டத்தால் பல குளறுபடிகள் நடந்துவருகின்றன. பட்ட மேற்படிப்பு தொடங்குவதற்கு முன்பாவது அரசு, பல்கலைக்கழகங்களை அழைத்துப் பேச வேண்டும் என்பதே பேராசிரியர்கள் கோரிக்கையாகயிருக்கிறது!

from Tamilnadu News https://ift.tt/5DmZxtE