வேலூரில், திராவிட நட்புக் கழகம் சார்பில் நேற்று இரவு நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டுக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமை வகித்தார். மூத்த அமைச்சர் துரைமுருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நடிகர் சத்யராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு மத குருமார்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தொடக்கத்தில் பேசிய நடிகர் சத்யராஜ், ‘‘கடவுள் நம்பிக்கையில்லாத தந்தை பெரியார்தான் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களின் இட ஒதுக்கீட்டுக்காகப் போராடினார். கடவுள் நம்பிக்கை இருக்கிறது, இல்லை என்பது இரண்டாவது பட்சம். கடவுள் நம்பிக்கை எதற்குத் தடையாக இருந்தாலும், அதை நீக்குவது முக்கியம். அதுதான் தந்தை பெரியாரின் முக்கியமான குறிக்கோளாகவும் இருந்தது. பிறப்பால் உயர்ந்தவனும் இல்லை; தாழ்ந்தவனும் இல்லை. குறிப்பிட்ட சாதியில் பிறந்தால் உயர்ந்தவன்; குறிப்பிட்ட சாதியில் பிறந்தால் தாழ்ந்தவன் என்பதே கிடையாது.

நடிகர் சத்யராஜ்

அதேபோல, ஆணாகப் பிறந்தால் உயர்ந்தவன், பெண்ணாகப் பிறந்துவிட்டால் அவர்கள் தாழ்ந்தவர்களும் கிடையாது. இதற்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்பதுதான் பெரியாரின் கருத்து. நம்பிக்கை, நம்பிக்கையின்மை என்பதைத் தாண்டி, உரிமைக்காகப் போராடும் பெரியாரிய தொண்டர்களின் பணி என்பது சமுத்துவம், சகோதரத்துவம், சம நீதி ஆகியவைதான். அதை நோக்கி நாம் எல்லோரும் ஒன்றாகப் போராட வேண்டும். மதங்களை மறந்து, மனிதத்தைப் போற்றி, உயர்த்துவோம்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், ‘‘தமிழகத்துக்கு இப்போது மத நல்லிணக்கம் பற்றிய உரையாடல், விவாதம் தேவைப்படுகிறது. இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் மட்டும்தான் நெடுங்காலமாக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு இந்த மண்ணில் முதிர்ச்சியும், பக்கவமும் நிறைந்த தலைவர்கள் நம்மை வழிநடத்தியிருக்கிறார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட தமிழ்நாடு அமைதியாக இருந்தது.

எங்கும் வன்முறை வெடிக்கவில்லை. ஆனால், இப்போது கவலை நேரிடுகிறது. இந்த நல்லிணக்கத்தைச் சிதைத்துவிடுவார்களோ, வன்முறைகளைத் தூண்டிவிட்டு, இந்த நாட்டையும், தமிழ்நாட்டையும் மதவெறி வேட்டைக் காடாக மாற்றிவிடுவார்களோ… என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு, இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.

தொல்.திருமாவளவன்

சங் பரிவார்களின் கொட்டம் தலைவிரித்து ஆடத் தொடங்கியிருக்கிறது. அவர்கள் இன்னும் அமைப்புரீதியாக வலிமைப் பெறவில்லை. ஆனாலும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் சர்ச்சையை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாடு அரசுக்கே நெருக்கடி கொடுக்கிறார்கள். நம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கே சவால் விடுக்கிறார் ஆர்.என்.ரவி.

இவர் ஆளுநராக நியமிக்கப்பட்டபோதே, ‘இவர் மிகவும் ஆபத்தானவர். சங் பரிவார்கள் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள்’ என்று நான் அறிக்கை வெளியிட்டேன். ஆர்.என்.ரவி, ஆளுநர் என்பதையே மறந்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ் தொண்டராக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லி தமிழ்நாட்டு அரசுக்குப் பெரும் நெருக்கடி தந்துகொண்டிருக்கிறார். ‘சனாதனத்தில் தீண்டாமை இல்லை’ என அப்பட்டமாகப் பொய் சொல்கிறார். சாதிவெறி, மதவெறியைத் தூண்டுகிறார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் குழப்பதை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். தி.மு.க-வை வீழ்த்தினால்தான் பெரியார் அரசியலை வீழ்த்த முடியும். அதுதான் அவர்களின் நோக்கம். ஏன், பெரியார் அரசியலை வீழ்த்த வேண்டும்… பெரியார் அரசியல் வலிமை இழந்தவர்களை வலிமைபெறச் செய்கிறது. பெண்களை வலிமைபெறச் செய்கிறது, ஒடுக்கப்பட்டவர்களை வலிமைபெறச் செய்கிறது, பிற்படுத்தப்பட்டவர்களை வலிமைபெறச் செய்கிறது. ‘இந்துத்துவா’ என்பது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ஸின் செயல் திட்டம்.

இந்துத்துவா என்பது பெரும்பான்மை வாதத்தை முன்னிறுத்துகிற செயல் திட்டம். மதத்தின் அடிப்படையிலான வன்முறை அரசியல், ராமரை வைத்து ஆதாயம் தேடுகிற அரசியல்தான் அவற்றின் நோக்கம். இந்துத்துவாக்கும், இந்து மதக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை. நாம் எந்த மதத்தின் உணர்வுகளையும், நம்பிக்கையையும் காயப்படுத்தவில்லை. மத உணர்வுகளையும், நம்பிக்கையையும் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிற சங் பரிவார்களின் இந்துத்துவா அரசியலை புரிந்துகொள்ளுங்கள். அதுவே, மத நல்லிணக்கத்துக்குத் தீர்வு’’ என்றார்.

அமைச்சர் துரைமுருகன்

நிறைவுரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘முதன் முதலாக இந்தியாவில், சுதந்திரக்கொடியை ஏற்றியது இந்த வேலூரில்தான். எதுவாக இருந்தாலும் வேலூரில்தான் ஆரம்பமாகும். பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்ததும் வேலூரில்தான்.

அதனால் தி.மு.க பிறந்ததும் வேலூரில்தான். அண்ணாவைச் சிறைச்சாலையில் வைத்ததும் வேலூர். வெளியே வந்த அண்ணா, ‘திராவிட நாட்டை ஒத்திவைக்கிறேன்’ என்று சொன்னதும் வேலூரில்தான். ஆக, அச்சாரம் வேலூர்தான். வேலூரில் நடைபெறும் இந்த மாநாட்டின் லட்சியமும் நிச்சயமாக வெற்றிபெறும். மதங்கள் இணக்கமாக இருக்க வேண்டும். நல்லெண்ணத்தோடு இருக்க வேண்டும்’’ என்றார்.

from Tamilnadu News https://ift.tt/UOW3092