வேலூர், காட்பாடியில் ‘தம்பி பிரியாணி’ என்ற பெயரில், கடந்த 9-ம் தேதி புதிதாக பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவையொட்டி, அன்றைய தினம் ‘சிக்கனோ, மட்டனோ… ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம்’ என்ற அறிவிப்பைக் கடை உரிமையாளர் விளம்பரப்படுத்தியிருந்தார். இதனால், பிரியாணி பிரியர்கள் கடைக்குள் முண்டியடித்து குவிந்திருந்தார்கள். வரிசையும், சாலை வரை நீண்டிருந்ததால், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த வழியாகவந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மக்கள் வெயிலில் அவதிப்படுவதையும், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததையும் கவனித்தார். இதையடுத்து, தனது காரை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கிவந்து, பிரியாணி கடை மேலாளரை அழைத்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ‘‘பிச்சையா போடுறீங்க… எல்லோரையும் மரியாதையாக உட்கார வைக்க முடியாதா..? எத்தனைப் பேர் நிற்கிறாங்க, பாவம்! எல்லோரையும் போகச் சொல்லுங்க. கடையை மூடுங்க’’ என்று அறிவுறுத்தினார்.

ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

அப்போதும் கூட்டம் கலையாததால், போலீஸார் மூலம் கூட்டம் கலைக்கப்பட்டு, பிரியாணி கடை இழுத்து மூடப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி, சமூக வலைதளங்களில் பெரும் பேசுப்பொருளாக மாறியது. நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான சரத்குமாரும்கூட, ‘‘தன்மானத்தை இழந்து, சுயமரியாதை விடுத்து கிடைக்கும் அத்தியாவசியமற்ற இலவசத்தை இனியாவது தவிர்த்திடுங்கள்’’ என்ற அறிவுறுத்தலோடு, அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், பிரியாணி கடை விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திடீரென செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘‘கடந்த 9-ம் தேதி புதிதாக திறப்பு விழா கண்ட அந்தத் தனியார் உணவகத்தில் வழக்கத்துக்கு மாறாகவும், அளவுக்கு அதிகமாகவும் கூட்டம் கூடியது. காலை 9 மணி முதலே சாலைகளில் நீண்ட தொலைவுக்கு நின்றுகொண்டிருந்தார்கள்.

இதுதொடர்பாக, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில், காட்பாடி வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் கடையைக் கண்காணித்தனர். தொடர்ந்து, 3 மணி நேரத்துக்கும் மேலாக அந்தத் தனியார் உணவகத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ‘ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும்’ என்று வட்டாட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர். அந்த சமயத்தில், காட்பாடி பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவிட்டு அலுவலகத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தைப் பார்த்து வாகனத்தை நிறுத்தி, அந்த இடத்துக்குச் சென்று ‘ஏன், இவ்வளவு கூட்டம், எதற்காக நிற்கிறார்கள்?’ என உரிமையாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வுசெய்தேன். சம்பந்தப்பட்ட தனியார் உணவகம் அன்று புதிதாகத் திறப்பு விழா கண்டிருந்ததால், திறப்பு விழா நாளான அன்றைய நாள், ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்ற அறிவிப்போடு, அந்த உணவகம் தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக, பிரியாணி வாங்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகமாகக் கூடியிருந்ததாகவும் சொன்னார்கள்.

ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

தனியார் உணவகத்தின் சார்பில் எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடு வசதிகளும் செய்யப்படவில்லை. மேலும், காலை நேரத்தில் அதிக வெயிலின் காரணமாக பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் அல்லது அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான், உணவகத்தை தற்காலிகமாக மூடவும், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரும்போது, அதற்கான தகுந்த ஏற்பாடுகளை செய்து, பின்னர் உணவகத்தை திறக்கும்படியும் உணவக நிர்வாகத்துக்கு நேரடியாக அறிவுரை வழங்கப்பட்டது. பின்னர், அந்த உணவகத்தின் உரிமம் மற்றும் இதர விதிமுறைகள் சரியாக இருக்கின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தனியார் உணவக நிர்வாகத்தின் சார்பில் தங்கள் தவற்றை உணர்ந்து, சரியான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக கடிதம் கொடுத்ததன் அடிப்படையில் அன்றைய தினம் மாலையே உணவகம் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது. மக்களின் பாதுகாப்பு கருதியும், நுகர்வோர் நலன், சட்டம் – ஒழுங்குப் பிரச்னை கருதியும், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஒருசிலர் இந்த உணவகப் பிரச்னையைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்கு ஆதாயமாகப் பயன்படுத்துகிறார்கள். அதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.

from Tamilnadu News https://ift.tt/6c2kg8v