செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியே தீர வேண்டும் எனத் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. `செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கவே முடியாது’ என ஓங்கி அடிக்கிறார் தமிழ்நாடு முதல்வர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியைச் சுற்றி நடக்கும் பரபர அரசியல் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.
டெல்லிக்குச் சென்றிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசின் மூத்த வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதான் தமிழக அரசியலின் தற்போதைய ஹாட் டாப்பிக்.

பணம் பெற்றுக்கொண்டு அரசுப் பணி வழங்கிய முறைகேட்டில் அமலாக்கத்துறையால் கைதாகி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராகத் தொடரவைத்திருக்கிறார் ஸ்டாலின். இதற்கு அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ச்சியாகப் பதிவுசெய்துவருகின்றன. ஆளுநரும் தன் பங்குக்கு எதிர்ப்புகளைப் பதிவுசெய்து கொண்டேயிருக்கிறார். செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் குறித்து முதல்வர் கடிதம் எழுதியபோது, `செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வதை ஏற்க முடியாது’ என பதில் கடிதம் எழுதி, நெருப்பைப் பற்றவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
பிறகு ஜூன் 30-ம் தேதி அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாகவே அறிவித்தார் ஆளுநர். ஆனால், சிறிது நேரத்திலேயே அறிவிப்பை நிறுத்திவைத்தார். தலைமை வழக்கறிஞர்களுடன் முறையான ஆலோசனை செய்யாமல் அறிவித்ததால்தான் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

பரபரப்பான இந்த அரசியல் சூழலில் ஐந்து நாள் பயணமாக ஜூலை 7-ம் தேதி டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் தமிழ்நாடு ஆளுநர். ஜூலை 8-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். அமித் ஷா சந்திப்பின்போது பரபரக்கும் அரசியல் சூழல் குறித்து அமித் ஷாவுக்கு விளக்கியதாகவும், குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிநீக்க விவகாரத்தை எடுத்துச் செல்லியிருப்பதாகவும், அதற்குச் சில ஆலோசனைகளை ஆளுநருக்கு அமித் ஷா வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான ஆர்.வெங்கட்ரமணி ஆகியோரையும் சந்தித்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவது தொடர்பாக ஆளுநர் ஆலோசனை நடத்தியிருக்கிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இது தொடர்பாக நம்முடன் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சசிரேகா, “செந்தில் பாலாஜியை தார்மிக அடிப்படையில் பதவிநீக்கம் செய்திருக்க வேண்டும். அதற்கான முன்வரலாறுகள் தமிழக அரசியலில் இருக்கிறபோது, செந்தில் பாலாஜிக்கு மட்டும் தனி ரூட்டை ஏன் கடைப்பிடிக்கிறார் முதல்வர் என்றே தெரியவில்லை. அ.தி.மு.க தரப்பில் செந்தில் பாலாஜி விவகாரம், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, ஊழல், பி.டி.ஆரின் 30,000 கோடி ஆடியோ தொடர்பான புகார் என ஏற்கெனவே நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்திருக்கிறோம்.

ஆட்சிசெய்ய திறனற்ற திமுக அரசின் அவலங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துக் கூறியிருப்பார் என்றே நம்புகிறோம். ஆளுநர் சென்னைக்குத் திரும்பியதும், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தைத் தாண்டி மேலும் பல செய்திகள் வெளிவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை” என்கிறார் சசிரேகா.

நம்மிடம் பேசிய திமுக-வின் அமுதரசன், “தமிழ்நாட்டில் எந்த வேலையுமில்லாமல் இருப்பதால், ஆளுநர் டெல்லிக்குச் சென்றிருக்கலாம். அவரது டெல்லி பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமைச்சராகத் தொடரவைப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முடிவு. தவிர, ஆளுநருக்கு அதில் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. ஓர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, சிறிது நேரத்தில் நிறுத்திவைக்கிறார். அவரிலிருந்து அவரே முரண்படுகிறார். ஆளுநர் பதவியில் நீடிக்கவே தகுதியற்றவர் ஆர்.என்.ரவி. சென்னைக்குத் திரும்பியதும் ஆளுநர் என்ன அறிவிப்பை வெளியிட்டாலும் சரி, அதைத் துண்டுச்சீட்டுக்குச் சமமாகவே கருதுவோம்” என்கிறார் ஆவேசத்துடன்.
from Tamilnadu News https://ift.tt/YwIpHOC
