முன்னாள் முதல்வர் கருணாநிதி, உயிரோடு இருந்தபோதே பல்வேறு காரணங்களால் கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர் மு.க.அழகிரி. கருணாநிதி மறைவுக்குப் பிறகும் இன்றுவரை கட்சியில் சேர்க்கப்படவில்லை. கருணாநிதியின் மறைவின்போது கூட ஸ்டாலினும், அழகிரியும் ஒரே இடத்தில் இருந்தார்களே தவிர, பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. தேர்தலுக்கு முன்பு, `மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வாய்ப்பே இல்லை’ என்று அடித்துச் சொன்னவர்களில் அவரின் அண்ணனான மு.க.அழகிரியும் ஒருவர்.

ஆனால் தி.மு.க வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றவுடன் ட்விட்டரில் வாழ்த்து மட்டும் தெரிவித்தார். பதவியேற்பு விழாவுக்கு தனது மகன் துரை அழகிரியையும், மகள் கயல்விழியையும் அனுப்பிவைத்தார். இதனால் இரு குடும்பங்களுக்கு உள்ளும் மீண்டும் சுமூகமாக சூழல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் 2 முறை மதுரை சென்றபோதும் மு.க.அழகிரியை சந்திக்கவில்லை.

கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின்

கடந்த 10 ஆண்டுகளாக இருவருக்குள்ளும் கனலாய் தகித்துக் கொண்டிருந்த வெப்பம், உதயநிதி அமைச்சரான பிறகு சற்றே தளர்ந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடக்கிவைக்க சென்ற உதயநிதி, தனது பெரியப்பா மு.க.அழகிரி வீட்டுக்குச் சென்றார். மு.க.அழகிரி மற்றும் அவரது மனைவியின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிர்வாதமும் பெற்றார். அதன்பிறகு கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் ஸ்டாலின், அழகிரியும் ஒன்றாக பங்கேற்க வாய்ப்பிருப்பதாக கோபாலபுர வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டன. அதுபோலவே, கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் ஸ்டாலினும் அழகிரியும் சந்திக்கப் போகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் அமெரிக்காவில் இருக்கும் தனது மகள் வீட்டில் அழகிரி இருந்ததால் வரவில்லை.

இந்த சூழலில்தான் தயாளு அம்மாளின் பிறந்தநாளையொட்டி இருவரும் சந்தித்து இருக்கிறார்கள். தயாளு அம்மாளின் 90-வது பிறந்தநாளையொட்டி ஜூலை 9-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின், அழகிரி, தமிழரசு உள்ளிட்டோர், கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் வருகை தந்தனர். மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி, கிருத்திகா, கனிமொழி, தயாநிதி மாறன், மு.க.அழகிரி என பலரும் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றனர்.

மு.க.ஸ்டாலின் வீட்டிற்குள் நுழைந்த 10-வது நிமிடத்தில் மு.க.அழகிரியும் வீட்டிற்குள் சென்றார். இருவரும் ஒரு மணி நேரம் வீட்டுக்குள் ஒன்றாக இருந்தனர். அப்போது இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ செய்தி இதுவரை வெளியாகவில்லை.

ஆனால் அதுதொடர்பாக கோபாலபுர வட்டாரத்தில் விசாரித்தபோது, “5 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டதால், இருவரின் உடல்நலம் குறித்தும் மாறி விசாரித்துக் கொண்டனர். இருவரும் சில விஷயங்களை பேசிக்கொண்டனர். குடும்ப விவரங்கள் குறித்து பேசியவாறே ஆட்சி, நிர்வாகம் குறித்தும் பேச்சு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. முதல்வர் செய்துவரும் பணிகளை மு.க.அழகிரி பாராட்டினார்” என்கின்றனர்.

அழகிரி – உதயநிதி ஸ்டாலின்

பிறகு இருவரும் தனித்தனியே அவரவர் காரில் புறப்பட்டுச் சென்றனர். கடைசியாக கருணாநிதி மறைவின்போது இருவரும் ஒன்றாக சந்தித்துக்கொண்டனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த சந்திப்பால், இருவருக்கும் இடையிலான மோதல்போக்கு இத்துடன் முடிந்துவிட்டதா அல்லது இது வெறும் சம்பிரதாயமானதா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “இருவரும் எப்போது சண்டையிட்டுக் கொண்டார்கள்? இப்போது சமாதானம் ஆக?” என்று மறு கேள்வி கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டார். எனினும் மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து இந்த சந்திப்பின்போது எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.!

from Tamilnadu News https://ift.tt/lXS6u3A