நாம் தமிழர் கட்சி சார்பில் பரமக்குடி முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடனை ஆகிய தொகுதிகளுக்கான கலந்தாய்வு பொதுக்கூட்டம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீமான், `தி.மு.க ஆட்சியை எளிதாகக் கலைக்க முடியாது. சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கும் முறை இப்போது இல்லை. ஒருவேளை `ஒரே நாடு ஒரே தேர்தல்’ என நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்தால் வாய்ப்பிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எவ்வாறு கலைக்க முடியும்… ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி விளையாடுகின்றனர். தேர்தலில் மக்களையே சந்திக்காத, ஒரு ஓட்டுகூட வாங்காத நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரை மத்திய அரசின் கேபினட் அமைச்சராக ஆக்கியிருக்கின்றனர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்கிறீர்கள். இது கேலிக்கூத்தாக இருக்கிறது. ஆனால், அதிகாரம் மக்களுக்கே என்று பேசுகிறார்கள். இங்கு அடிப்படையே தவறாக இருப்பதால், அந்த அடிப்படையையே தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் கட்டிப் பயனில்லை. நாட்டிலுள்ள அனைத்துக் குடிமகனுக்கும் அரசியல் பேச உரிமை உண்டு. நீதிபதி, ஆட்சியர், அதிகாரிகள் எனப் படித்தவர்கள் யாரும் பேசக் கூடாது என்கிறீர்கள். ஆனால், இதையெல்லாம் இயக்கக்கூடிய முதலமைச்சர் பேசலாம் என்கிறீர்கள். கவர்னரும் அரசியல் பேசலாம். ஆனால், அவர் எதையுமே உருப்படியாகப் பேசுவதில்லை. தேர்தல் நேரத்தில் குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டது. இப்போது அதைக் கொடுங்கள் என நெருக்கடி கொடுக்கும்போது தகுதி பார்த்து கொடுக்கப்படும் என்கிறார்கள். 1,000 ரூபாய் கொடுப்பதற்கே அரசு தகுதி பார்க்கிறது.

பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்

மக்களும் அதேபோல் தகுதி பார்த்து வாக்களிக்க வேண்டும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்களா… மத்தியில் ஆளும் அரசு செயல் அரசாக, சேவை அரசாக இல்லை விளம்பர அரசாகத்தான் இருக்கிறது. தக்காளியைத் திருடிச் சென்றுவிடுவார்கள் எனக் காவலாளிகளைப் பாதுகாப்புக்கு நிறுத்துகின்றனர். இது எந்த நாட்டிலாவது இருக்கிறதா… தக்காளிக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கும் நிலை வந்திருக்கிறது. யாராவது இலவசம் வேண்டும் எனக் கேட்டார்களா… விலைவாசியைக் குறைத்தாலே போதும். வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் களம் கண்டு எங்களது பலத்தை நிரூபிப்போம்” எனக் கூறினார்.

from Tamilnadu News https://ift.tt/YA1WpgI