ம.தி.மு.க-வின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று வைகோ தலைமையில் நடந்தது. 162 பேர் கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களில் 142 பேர் கலந்துக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க தலைவர் வைகோ, “இன்று நடந்த நிர்வாகக் குழு கூட்டதில் தமிழ்நாட்டின் ஆளுநரைத் திரும்பப் பெறுவது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வேண்டிக்கொள்கின்ற கையெழுத்து இயக்கம் குறித்து தகவல் பரிமாறப்பட்டது.

வைகோ

தமிழ்நாடு முழுவதும் நடக்கும் இந்த இயக்கத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கையெழுத்திடுகிறார்கள். செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அன்று மதுரையில் மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 17,18-ம் தேதிகளில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்படவிருக்கிறது. அதில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இரண்டு நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசியில் அழைத்து கூட்டத்தில் கலந்துக்கொள்ள வலியுறுத்தியிருக்கிறார்.

நானும் வருவதாக ஒப்புக்கொண்டேன். ஆளும் மத்திய பா.ஜ.க அரசு சிறுபான்மையினரின் உரிமையைப் பறிக்கும் விதத்திலும், சனாதான தர்மத்தை நிலைநாட்டும் வகையிலும் இந்துத்துவா அரசாக செயல்படுகிறது. அதனால்தான் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் பேசுகிறார். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு பல்வேறு மதங்கள், கலாசாரங்கள், மொழிகள், பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.

வைகோ – முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டம் குறித்து விவாதிக்கப்பட்ட போது, அதை எதிர்த்து கடுமையாக குரல்கொடுத்தோம். அதனால் அப்போது அது தாக்கல் செய்யப்படாமல் நிறுத்தப்பட்டது. ஒருவேளை இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் நாடு முழுவதும் கலவரங்கள் வெடிக்கும். நாட்டின் பன்முகத் தன்மையை பாதிக்கும். பாபர் மசூதி இடிப்பு, காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, முத்தலாக் தடைச் சட்டம் என பா.ஜ.க-வின் அஜண்டாவை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள்.

கர்நாடக முதல்வர் காவிரி குறுக்கே அணைக் கட்டுவதாக தெரிவித்திருக்கிறார். இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே, அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம். ராகுல் காந்தி அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை குஜராத் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசின், அரசியல் பழிவாங்கு நடவடிக்கையத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறோம்.

நிர்வாக குழு கூட்டம்

மணிப்பூர் காலவரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கின்றனர். சிறுபான்மை கிறிஸ்தவர்கள்மீது பெரும்பான்மை சமூகம் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறது. பிரதமரின் கண் ஜாடையில்தான் இந்தக் கலவரம் நடந்துவருகிறது. இந்த பா.ஜ.க அரசை வீட்டுக்கு அனுப்ப நாம் ஒன்றாக இருந்து போராடுவோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/l6mPriX