தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரிலான நடைபயணத்தை வரும் 28-ம் தேதி ராமநாதபுரத்தில் தொடங்கவுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த பயணத்தை தொடங்கி வைக்கிறார் என சொல்லப்படுகிறது. நடைபயண தொடக்க விழாவில் பெரும் கூட்டமும், அண்ணாமலையுடன் பாதயாத்திரையில் சுமார் 5,000 பேரும் பங்கேற்கச் செய்ய பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட பா.ஜ.க-வினர் மட்டும் பங்கேற்கும் வகையில் நடைபயணம் திட்டமிடப்பட்டிருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடைபயணம் நடைபெறும் இடங்களுக்கான பட்டியல் ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது. அடுத்த 5 மாதங்கள் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் பயணட் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி சென்னையில் நடைபயணம் முடிவுறுகிறது. சென்னையில் 4 நாட்கள் பயணம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அண்ணாமலை மேற்கொள்ளும் இப்பயணமானது, தமிழர்களின் எழுச்சிக்காகவும் ஊழலை அறவே ஒழிக்க வேண்டுமென்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது என தமிழக பா.ஜ.க தலைமை அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே ராகுல் காந்தி பாரத் ஜோடோ பயணம் மேற்கொண்டபோது, மிகக் கடுமையாக விமர்சித்தவர்களில் அண்ணாமலையும் ஒருவர். தற்போது அண்ணாமலையே நடைபயணம் மேற்கொள்வது தொடர்பாக கமலாலய வட்டாரத்தில் விசாரித்தோம்.
“பயணத்தை நிறைவு செய்யும்போது தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் செல்வாக்கு நிச்சயம் பெருகியிருக்கும். அண்ணாமலைக்கு ஏற்கெனவே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. புதிதாக ஏராளமான இளைஞர்களின் கவனத்தை நாங்கள் பெறுவோம். கிரவுண்ட் லெவலில் பாஜகவுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்பயணம் அமையக்கூடும். பயணத்தை வெற்றிகரமாக முடிப்பதுதான் எங்களுக்கு இருக்கும் பெரிய சவால். நிச்சயம் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும்” என்கின்றனர்.
ஆனால், “நடைபயணம் மேற்கொள்வது நல்ல விஷயம்தான் என்றாலும் கட்சியை முன்னிலைப்படுத்தாமல், அண்ணாமலையை முன்னிலைப்படுத்துவதுதான் அதிகமாக இருப்பது போலத் தெரிகிறது. மாநிலத் தலைமையின் முகத்தைக் காட்டி அரசியல் செய்யும் வாடிக்கையே இங்கு கிடையாது. கட்சியின் கொள்கையைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும். எனவே இந்த பயணம் மோடி ஆட்சியின் சாதனைகளையும், கொள்கைகளையும் பரப்புவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்தால் மகிழ்ச்சிதான்” என்றும் சிலர் கூறுகின்றனர்.
அண்ணாமலையின் பயணம் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “அண்ணாமலையை நீக்கினால்தால் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி ஒரு தோற்றத்தை உருவாக்கினாலும், தேவையில்லாமல் மாநிலத் தலைமையை மாற்ற முடியாது என்கிற முடிவை பா.ஜ.க தலைமை எடுத்திருக்கிறது. எனவே அண்ணாமலையை டெல்லி பா.ஜ.க மதிக்கிறது. அவருடைய கருத்துக்களுக்கு டெல்லியில் மதிப்பு இருக்கிறது. அண்ணாமலையையும் உடன் வைத்துக்கொண்டுதான் டெல்லியில் அ.தி.மு.க தலைவர்களுடன் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அமித் ஷா சென்னை வரும்போதெல்லாம் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். தன்னுடைய பதவிக்காலத்தில் முத்திரை பதிக்க வேண்டுமென்று அண்ணாமலையும் கருதுகிறார்.

அந்தவகையில் பா.ஜ.க-வை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவும், அண்ணாமலையின் தலைமையை வலுப்படுத்தவும் இந்த நடைபயணம் உதவும் என்று கருதுகிறேன். இந்த பயணத்தில் மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்றால் பலன் கிடைக்கும் என்று பா.ஜ.க-வினர் எதிர்பார்ப்பதும் சரிதான். அதேவேளையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவி என்பது நியமனப் பதவிதான் என்று சீமான் போன்றவர்கள் கூறுவதால், அண்ணாமலைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற அரசியல் தட்பவெப்ப நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. ஏற்கெனவே இருந்த நியமனத் தலைவர்களைப் போலவே அண்ணாமலையையும் நடத்தினால் அது பா.ஜ.க வளர்ச்சிக்கு பின்னடைவைக் கொடுக்கும். அண்ணாமலைக்கு கூடுதல் அதிகாரத்தை பா.ஜ.க தலைமை கொடுக்க வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்” என்றார்.
ஆனால் அண்ணாமலை இந்த பயணத்தை இந்துத்துவ கொள்கைகளை பரப்புவதற்காக பயன்படுத்தினால் நிச்சயம் எதிர்மறையான தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டின் இயற்கையான அரசியல் போக்கை உணர்ந்து, மக்கள் மத்தியில் எந்த பிளவையும் ஏற்படுத்தாமல் இந்த பயணத்தை மேற்கொண்டால், நடுநிலை மக்களின் ஆதரவு கிடைத்து, நிச்சயம் பலனைக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக இந்த பயணத்தை மாற்றி, இந்துத்துவா சிந்தனைகளை முன்னெடுத்தால் அது அவர்களுக்குத்தான் பின்னடைவாகத்தான் முடியும். மோடியின் சாதனைகளை பரப்ப இதனை பயன்படுத்தினால் ஓரளவு பலன் கிடைக்கலாம். அதேசமயம் மோடியின் சாதனைகளை அண்ணாமலை பரப்பும்போது, அதற்கு பதிலடி தரும் வகையில், மோடி எந்த சாதனைகளையும் செய்யவில்லை என்று தி.மு.க தரப்பு எதிர்க்கருத்துக்களை முன்வைக்கலாம்.

எனவே இந்த பயணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேசமயம் அண்ணாமலை மீது பா.ஜ.க தலைமை அதிக நம்பிக்கையோடு இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. பா.ஜ.க நடத்தும் கூட்டங்களுக்கு முன்பை விட இப்போது அதிக கூட்டம் வருகிறது. பல்வேறு பிரபலங்கள் கட்சியில் இணைவதையும் பார்க்க முடிகிறது. அ.தி.மு.க பிளவுபட்டிருக்கும் சூழலை எதிர்க்கட்சி அரசியலை வலுவாக அண்ணாமலை எடுக்கிறார். இதெல்லாம் பாசிட்டிவ் என்றாலும், குற்றப் பின்னணி கொண்டவர்களும் பலர் இணைகிறார்கள். கடந்த 6 மாதங்களில் பா.ஜ.க-வினர் கைதான வழக்குகளைப் பார்த்தாலே நமக்குப் புரியும். தலைமைப் பொறுப்பில் அவர் நடந்துகொள்ளும் விதம், கட்சிக்குள் சீனியர்களை அவர் நடத்தும் விதம் போன்ற விமர்சனங்களும் இருக்கின்றன என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/P6jZsf5
