`பா.ஜ.கவை வீழ்த்துவோம்’ என்ற சூளுரையுடன் கர்நாடகா தலைநர் பெங்களூருவில் வரும் ஜூலை 17-ம் தேதி எதிர்கட்சிகள் ஒன்றிணையும் இரண்டாவது கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள பெரிய கட்சிகள் மட்டுமல்லாமல் ம.தி.மு.க., வி.சி.க., கொ.ம.தே.க., பார்வர்ட் பிளாக் போன்ற சிறிய கட்சிகளுக்கும் முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்

முதல் ஆலோசனைக் கூட்டம் – 17 கட்சிகள்:

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மையாக வெற்றிபெற்று பெரும் வலிமையாக இருக்கும் பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டுமென்றால் எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற பொதுக்கருத்து பல்வேறு எதிர்க்கட்சிகளிடமும் வேரூன்றியிருக்கிறது. அந்தவகையில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முதல் ஆலோசனைக் கூட்டத்தை கடந்த ஜூன் 23-ம் தேதி பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் முன்னெடுத்தார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவார், சுப்ரியா சுலே, சிவசேனா தலைவர்கள் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், ஆதித்யா தாக்கரே, சி.பி.ஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சி.பி.ஐ (எம்.எல் – லிபரேஷன்) பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம்

கூட்டத்தின் முடிவில், “கருத்து வேறுபாடுகளைக் கடந்து பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே நம்முடைய ஒற்றை இலக்காக இருக்கவேண்டும்!” என எதிர்கட்சித் தலைவர்கள் சூளுரைத்தனர்.

இரண்டாவது ஆலோசனைக்கூட்டம் – 24 கட்சிகள்:

இந்த நிலையில், அடுத்தகட்டமாக எதிர்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. முக்கியமாக இந்தக் கூட்டத்திற்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்ட பிரதானப் பெரியகட்சிகள் தவிர, முதல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத பல சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

வைகோ – திருமா

குறிப்பாக, தி.மு.க கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ்(ஜோசப்), கேரள காங்கிரஸ்(மணி) உள்ளிட்ட கட்சிகளுக்கும் புதிதாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது பெங்களூருவில் நடைபெறவிருக்கும் எதிர்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் 24 கட்சிகள் கலந்துகொள்ளவிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கும் நோக்கம், எதிர்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். “பாரதிய ஜனதா கட்சி ஜி.கே.வாசனின் த.மா.கா கட்சிக்கெல்லாம் அழைப்பு விடுக்கும்போது, காங்கிரஸ் கட்சி வி.சி.க, ம.தி.மு.க-வுக்கெல்லாம் அழைப்பு விடுப்பதில் எந்த தவறும் இல்லை. பா.ஜ.க எப்படி தங்கள் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கிறதோ அதேபோலத்தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தங்கள் கூட்டணியை விரிவுபடுத்த நினைக்கின்றன. முக்கியமாக சிறிய கட்சிகள் பா.ஜ.க பக்கம் தாவிவிடக்கூடாது என்பதை மனதில் வைத்தும் இந்த முயற்சியை கையிலெடுத்திருக்கின்றன” என்றார்.

மேலும், “முதல் கூட்டத்தில் பா.ஜ.க – மோடி வெற்றி பெற்றுவிடக் கூடாது என முடிவெடுத்தனர். இரண்டாவது கூட்டத்தில் மோடி எதிர்ப்பு ஓட்டுக்களை எப்படி தங்கள் வசம் ஈர்ப்பது, எந்தெந்த பகுதிகளில் பலவீனமாக இருக்கிறோம் அதை எப்படி பலமாக்குவது என பல முக்கிய விஷயங்களை கலந்தாலோசிக்க இருக்கின்றனர். அதனால்தான் சோனியா காந்தியே கலந்துகொள்கிறார்.

ப்ரியன், பத்திரிகையாளர்

இந்த இரண்டாவது கூட்டத்தில் ஆம் ஆத்மிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்வது சந்தேகம்தான். காரணம் டெல்லி அதிகார மோதல் மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தால்தான் எங்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். அதேபோல முந்தைய கூட்டத்தில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி இப்போது பிளவுபட்டுவிட்டது. அந்த கட்சிசார்பில் கலந்துகொள்வார்களா என்பதும் சந்தேகமே. மேலும், இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, மாநில கட்சிகள் பலவீனமடைந்தால் அது காங்கிரஸ் கட்சி பலமாகவும் அமையும். அதேபோல, பா.ஜ.க மாநில கட்சிகளை உடைப்பதும், விசாரணை ஆணையங்களைக் கொண்டு மிரட்டுவதும் போன்ற அதிகார அழுத்தங்கள் எதிர்கட்சிகளின் ஒற்றுமையையும் கூட்டணியையும் வலிமைப் படுத்தி வருகின்றன!” என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்தார்.

from Tamilnadu News https://ift.tt/uKC8LF2