தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கைதுசெய்யப்பட்ட அன்றே செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட செந்தில் பாலாஜி, இப்போதுவரை மருத்துவமனையிலேயே நீதிமன்றக் காவலில் இருக்கிறார். இதன் காரணமாக அமலாக்கத்துறையால், செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதில் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆரம்பம் முதலே, “அமலாக்கத்துறையின் கைது சட்ட விரோதமானது. சட்டவிரோதக் கைது என்பதால் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் வழங்கியதும் சட்ட விரோதமானது செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சையிலிருந்த காலத்தை நிச்சயமாக அமலாக்கத்துறையின் காவல் கணக்கில்தான் சேர்க்க வேண்டும்” என வாதாடினார்கள்.
அதேசமயம் அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “எங்களுக்கு குற்ற ஆவண நடைமுறைச் சட்டம் பொருந்தாது. எங்களுக்கு பி.எம்.எல்.ஏ (பண மோசடி தடுப்புச் சட்டம் ) எனப்படும் சிறப்புச் சட்டம் மட்டுமே பொருந்தும். அதன்படி கைதுக்கான காரணத்தை உடனே தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. செந்தில் பாலாஜியைக் கைதுசெய்தது சட்டவிரோதம் அல்ல. செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சையில் இருக்கக்கூடிய காலத்தை அமலாக்கத்துறையின் காவல் கணக்கில் சேர்க்கக் கூடாது (அமலாக்கத்துறையைப் பொறுத்தவரை கைதுசெய்த 15 நாள்களுக்குள், கைதுசெய்த நபரை ED காவலில் எடுக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு விதி)” என்று வாதாடினார்.

பின்னர் நீதிபதி நிஷா பானு, “செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது. ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கது. செந்தில் பாலாஜியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார். ஆனால் நீதிபதி பரதசக்ரவர்த்தியோ, நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்புக்கு நேரெதிராக, அமலாக்கத்துறையினருக்குச் சாதமாக அமையும் வகையில் தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளின் தீர்ப்பில் முரண்பாடு ஏற்பட்டதால், வழக்கில் மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். அதையடுத்து, சி.வி.கார்த்திகேயன் அளிக்கும் தீர்ப்பு, முந்தைய நீதிபதிகளில் ஒருவரின் தீர்ப்பை ஏற்கும் விதமாக இருக்கும் என்றும், அதுவே இந்த வழக்கின் முடிவைத் தீர்மானிக்கும் என்பது தெளிவானது.
அந்த வகையில் கடந்த இரண்டு நாள்களாக சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் செந்தில் பாலாஜி தரப்பினர் மற்றும் அமலாக்கத்துறை தரப்பினர் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இதில் முதல் நாள் விசாரணையில், “செந்தில் பாலாஜி ஏன் மெமோவை வாங்கவில்லை. அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்” என செந்தில் பாலாஜி தரப்பினரைக் கேள்வி கேட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இரண்டாவது நாளில் “செந்தில் பாலாஜியை ஒரு நாள்கூட காவலில் எடுத்து விசாரிக்காமல், தற்போது மீண்டும் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறுவது எந்தவிதத்தில் சரியானது” என்று அமலாக்கத்துறையை நோக்கியும் கேள்வியெழுப்பினார்.

இத்தகைய விறுவிறுப்பான சூழலில் இன்று நடைபெற்ற மூன்றாவது நாள் இறுதி விசாரணையில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி பரதசக்ரவர்த்தி அளித்த தீர்ப்போடு ஒன்றி தீர்ப்பளித்திருக்கிறார்.
அதாவது, நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “நீதிபதி பரதசக்கரவர்த்தியின் தீர்ப்பில் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்டவர் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.
முன்னதாக நீதிபதி பரதசக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பின் முழு விவரம்… “செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. கைதோ அல்லது தடுத்து வைக்கப்பட்டிருப்பதோ சட்டவிரோதமாக இல்லாத பட்சத்தில் இதுபோன்ற ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல. இந்த வழக்கைப் பொறுத்தவரை, நீதிமன்றக் காவலை சட்டவிரோதமானது என்று மனுதாரர் கோரவில்லை என்பதால், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.
கைதுசெய்யப்பட்டது முதலே மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு நாள்கூட அமலாக்கத்துறை காவலில் இருந்ததே இல்லை. ஆகவே, செந்தில் பாலாஜி சிகிச்சையிலிருந்த காலத்தை விட்டுவிட்டே, அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் நாள்களைக் கணக்கிட வேண்டும். அதன்படி, ஜூன் 14 முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும் வரையிலான காலகட்டத்தை அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் நாள்களில் எடுத்துக்கொள்ளக் கூடாது.”
from Tamilnadu News https://ift.tt/aUpOqH0
