சேலத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் ஆணையம் அ.தி.மு.க பொதுச்செயலாளராகத் தன்னை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி அனைவரின் காதிலும் பூ சுற்றுகிறார். 2018-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் தனது இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்தபடி, `அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்’ என்பது தற்போது வரை தொடர்கிறது.

புகழேந்தி

நிபந்தனையின்பேரில் மட்டுமே எடப்பாடி பழனிசாமியின் பெயர் அப்படி பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பியிருக்கிறோம். எனவே, `அ.தி.மு.க எங்களுக்கே சொந்தம், கொடி எங்களுக்கே சொந்தம்’ என யாரும் கூறிக்கொள்ள முடியாது. கொடநாடு கொலை வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வலியுறுத்தி, வரும் ஒன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் அனைவரும் அ.தி.மு.க கொடியோடு பங்கேற்போம்.

மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் தமிழ்நாடு டி.ஜி.பி உள்ளிட்டோரிடம் முறையாக அனுமதி பெற்று, விரைவில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குச் செல்வோம். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ் என்பதை மறந்துவிட்டு, இ.பி.எஸ் ஆதரவாளராகச் செயல்படுகிறார். அண்ணாமலையும், பழனிசாமியும் ஒருவருக்கொருவர் அவதூறாகப் பேசிவிட்டு, தற்போது பழனிசாமியை அண்ணாமலை `அண்ணன்’ என்று குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது.

புகழேந்தி

எடப்பாடி பழனிசாமியைக் கூட்டத்தில் பங்கேற்க பா.ஜ.க அழைத்திருப்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. விரைவில் அ.தி.மு.க யாருடையது என்பது அனைவருக்கும் புரியும். ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் கட்சியும், சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கோவையில் போட்டியிட்ட கமல்ஹாசனும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் பெருமளவில் வாக்குகள் பெற்றது பாராட்டுதலுக்குரியது” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/T17ZAHY