ஜெயலலிதாவால் முதல்வராக முடி சூட்டப்பட்டவர்; மூன்று முறை முதல்வராக இருந்தவர் என்று பெருமைப் படுத்தப்பட்டாலும், கட்சியில் தனக்கிருந்த செல்வாக்கை பறிகொடுத்து அ.தி.மு.க என்ற கட்சியில் இடமில்லாமலும், அரசியலில் தனது அடுத்த நிலை என்ன? என்கிற கேள்விக்கு விடை தெரியாமலும் தேடி கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். தமிழக அரசியல் ரேஸில் தானும் இருக்கிறேன் என்பதை காண்பிப்பதற்காக, கொடநாடு வழக்கு குறித்து வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
`அரசியல் அநாதையாக நின்று கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ்’
ஓ.பி.எஸ்ஸின் இந்த அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “இன்றிருக்கும் நடைமுறை அரசியலில் இருந்து ஓ.பி.எஸ் விலகி இருப்பதற்கு மிகப்பெரிய உதாரணம், இந்த ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பு. அந்த வழக்கு பற்றி சட்டமன்றத்தில் முதல்வர் பேசும் போது, அதற்கான தெளிவான விளக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் கொடுத்துவிட்டார். நாட்டு மக்களுக்கு இந்த விவரங்கள் எல்லாம் தெரியும். இப்போது மக்கள் அவதிப்படும் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, மதுவிலக்கு போன்ற எண்ணற்ற பிரச்னைகள் சார்ந்து ஆர்ப்பாட்டம் செய்யாமல், காலவதியான காரணத்தை தன் சுயநல அரசியலுக்காகக் கண்டுபிடித்து செய்வதை மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தொண்டர்களை தோளில் போட்டு சுமப்பது தான் தலைமையின் அழகு. மன உறுதியோடு ஒரு நிலைபாட்டில் இருப்பதுதான் தலைமை பண்பு. அதோடு ஒரு தலைவன் தாயன்போடு, மன்னிக்கும் குணம் கொண்டு, மன உறுதி பெற்று, சுயநலத்துக்கு அப்பாற்பட்டு விவேகமாக சிந்தித்து, குறைகளை சுட்டி காட்ட வேண்டும்… இது ஏதும் துளியளவும் இல்லாதவர்தான் ஓ.பி.எஸ். ஆரம்பத்தில் பல வாய்ப்புகள் கொடுத்தும் அதை நழுவவிட்டார். எந்த ஒரு முடிவெடுத்தாலும் குழப்பி அதற்கு முட்டுக் கட்டை போட்டு வந்தார். அவரை கட்சியிலிருந்து நீக்கிய பின் மிகப்பெரிய எழுச்சியடைந்து ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக இன்று செயல்பட்டு கொண்டிருக்கிறோம். எப்போதும் எந்த ஒரு முடிவையும் காலம் கடந்துதான் எடுப்பார் ஓ.பி.எஸ். இப்போதும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறார். அது அரசியலில் எந்த ஒரு மாற்றத்தையும் நிகழ்த்த போவதில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் இன்று அரசியல் அநாதையாக நின்று கொண்டிருக்கிறார்” என்றார்.
`ஓ.பி.எஸ்ஸின் ஆதங்கம், வருத்தம் அவர்களுடைய உட்கட்சி பிரச்னை சார்ந்தது”
இது ஒரு புறம் என்றால், தொடர்ந்து, `பா.ஜ.க-வை நம்பிதான் எல்லாம் செய்தேன்’ என்று ஓ.பி.எஸ் சொல்லி வந்த நிலையில், இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தனக்கு அழைப்பு வரவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். பா.ஜ.க-வும் அவரை கைவிட்டுவிட்டதா என்கிற கேள்வியினை அக்கட்சியின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜனிடம் முன் வைத்தோம்,

“தேசிய ஜனநாயக கூட்டணியின், கூட்டணி கட்சிகளுக்கான முதல்கட்ட சந்திப்புகாக அழைப்பு தான் இது. இதில் ஓ.பி.எஸ்ஸின் ஆதங்கம், வருத்தம் அவர்களுடைய உள்கட்சி பிரச்னை சார்ந்தது. ஒன்றாக இருந்தவர்கள் பிரிந்திருக்கிறார்கள். அரசியலில் எப்படி வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதில் பா.ஜ.க-வுக்கு எந்தவித கருத்துமில்லை என்று எங்கள் மாநிலத் தலைவர் பலமுறை சொல்லி இருக்கிறார். அவரின் அரசியல் எதிர்காலமும் கூட தனிபட்ட கட்சி சார்ந்ததாக இல்லை. மக்கள் முடிவில்தான் இருக்கிறது” என்றார்.
`மாயை மான் போல்…’
நிலைமை இவ்வாறு இருக்க, ஓ.பி.எஸ் கடந்த காலங்களில் செய்த தவறுகள், அவரின் எதிர்காலம் என்ன என்பது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “கடந்த காலங்களில் ஓ.பி.எஸ் பல தவறுகள் செய்திருக்கிறார். போட்டி பொதுக்குழு வைக்கவில்லை. அவரின் பலம் என்ன என்பதை காட்டவில்லை. அ.தி.மு.க-வில் துணை முதல்வராக இருந்த அவரிடம் பத்து எம்.எல்.ஏ., நூற்றுக்கு மேற்பட்ட செயற்குழு உறிப்பினர்கள் இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.

ஆனால், அவரோ ஒரு மாயை மான் போல் சமூக வாக்கு இருக்கிறது என்று நம்புகிறார். தென்மாவட்டங்களில் இருக்கு என்று நம்பினாலும் அதை நிரூபிக்க ஒரு தேர்தல் வேண்டும். அதற்கும் ஒரு தனிக்கட்சி தொடங்கினால் தான் அதுவும் சாத்தியமாகும். சொல்ல போனால் 2017-ஆம் ஆண்டிலேயே தனிக்கட்சி தொடங்கியிருந்தால் அரசியலில் ஒரு பிடிப்பு இருந்திருக்கும். எல்லாம் இழந்த பிறகு இப்போது ஏதும் இல்லாமல் அ.தி.மு.க-வை கை பற்றுவேன் என்று சொல்வதெல்லாம் அர்த்தமற்றது.
ஒருவேளை நீதிமன்றத்தில் சாதகமாக தீர்ப்பு வழங்கினாலும், உச்ச நீதிமன்றம் போய் தடை கேட்பார்கள். பொதுவாக நீதிமன்றங்கள் மூலம் கட்சியை கைப்பற்றுவது என்பது கனவிலும் சாத்தியமில்லாதது. ஒவ்வொரு பறவைக்கும் பறக்கும் தூரமும், உயரமும் மாறுபடும். தலைவர்களுக்கும் இது மாறுபடும். அதை ஓ.பி.எஸ் புரிந்து கொண்டது போலவே தெரியவில்லை. எந்த இடத்தில் விழுந்தோம் என்று தெரிந்தால் தானே எழுவது எப்படி என்பது தெரிய முடியும். விழுந்த இடமே தெரியவில்லையா… இப்போது இருக்கும் நிலையை பார்த்தால், அவர் அரசியலில் படுபாதளத்தில் விழுந்து கிடப்பது போல் தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் கொடநாடு விசாரணைக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்கிறார். இது தி.மு.க-வுக்கு ஆதரவாக தான் போய் முடியும். ஓ.பி.எஸ் தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்படுவது போல் ஒரு சாயல் தெரிந்தால் கூட அ.தி.மு.க அடிமட்ட தொண்டர்கள் அதை விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அ.தி.மு.க-வுக்கு எப்போதுமே தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் தான்.
இப்போது ஓ.பி.எஸுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு தனிக்கட்சி தொடங்கி தன் பலத்தை காட்டுவதுதான். அப்படி இல்லை… மாற்று கட்சியில் இணைவதாக இருந்தால் தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க. இதில் தி.மு.க, அ.ம.மு.க-வில் வாய்ப்பே இல்லை. அப்படி இணைந்தால் திருநாவுக்கரசு போல பா.ஜ.க-வில்தான் இணைய முடியும். அப்படி போனாலும் அவரின் சுயம்பு இழக்கும். ஆனால், இறுதியில் அந்த முடிவுதான் எடுப்பார் என்பது போல் தெரிகிறது” என்றார்.
`தி.மு.க-வுக்கு சாதகமாக இருக்கிறார் என்பதெல்லாம் ஏற்புடையதில்லை’
ஓ.பி.எஸின் இந்த கொடநாடு வழக்கு குறித்த ஆர்ப்பாட்டம் தி.மு.க-வுக்கு ஆதரவாக தான் போய் முடியும் என்று தராசு ஷ்யாம் கூறிய கருத்துக்கு பதிலளித்து பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ், “தி.மு.க தன்னிச்சையாக மக்கள் செல்வாக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய இயக்கம். இந்த இயக்கம் எந்த ஒரு தனிமனிதனுக்கு துதி பாடுவதோ அல்லது தனிமனிதன் தலைமை ஏற்கிற கட்சிகளுக்கு துதிபாடும் வேலையும் எங்களுக்கில்லை.

கொடநாடு வழக்கை பொறுத்தவரை தேர்தலுக்கு முன் சொன்னது போல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்றங்களிலும் வழக்கு இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. விரைவில் இதற்கு தீர்ப்பு வரும் போது தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய ஒரு புயல் வீசும். இப்போது ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அவர்கள் கட்சிக்குள் இருக்கும் பிரச்னையால் இதை பேசுகிறார்கள். இதனால் அவர் தி.மு.க-வுக்கு சாதகமாக இருக்கிறார் என்பதெல்லாம் ஏற்புடையதல்ல. ஓ.பி.எஸ்ஸின் அரசியல் எதிர்காலம் என்பது மக்கள் முடிவு செய்வதில் தான் இருக்கிறது” என்கிறார்.
`ஒவ்வொரு முறையும் தன் சுயநலனை மட்டும் பார்தார்’
ஓ.பி.எஸின் அரசியல் அஸ்தமனம் அ.தி.மு.க என்கிற கட்சியில் மட்டும்தானா?, அல்லது அவரது அரசியல் வாழ்க்கைக்கே முடிவா என்கிற விவாதம் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக அரசியலை உற்று நோக்கும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், “அரசியலில் இருந்தால் தனக்காக ஒரு கூட்டம் இருக்கும். அந்த கூட்டத்தை என்கேஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும். அது கொள்கை ரீதியகாவோ, அறிவு ரீதியாகவோ அல்லது சமீப அரசியல் போல் பொருளாதார ரீதியாகவோ கூட இருக்கலாம். ஏதாவது ஒரு கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும். அப்படி கொடுக்காமல் வாங்க மட்டுமே செய்தால் எவ்வளவு நாள் அது நிற்கும். கொள்கையும் பரப்ப மாட்டேன், பணமும் கொடுக்க மாட்டேன் எனும் போது ‘நான் உனக்கு இருக்கேன்பா…’ என்று பேச்சிலாவது இருந்திருக்க வேண்டும். அதுவும் இல்லாததால் தான் உள்ளூரில் கூட அவருக்கு துணையாக யாரும் நிற்கவில்லை.

ஏன் ஓ.பி.எஸ் இது போன்ற ஒரு அரசியலை முன்னெடுக்கவில்லை என்றால், கட்சியில் உச்சாணி கொம்பிலிருந்த நபர்கள் மூலம் அவருக்கு எடுத்தவுடனே உட்சபட்ச பதவி கிடைத்துவிடுகிறது. எடுத்த எடுப்பிலே அங்கு போனதும் கீழ் உள்ள படிக்கட்டுகள் பற்றி ஏதும் தெரியாமலாகிறது. இதனால், ஜெயலலிதா… அதற்கு பின் ஓ.பி.எஸ்… அதற்கு பின் தான் எல்லோரும் என்கிற எண்ணமும் அவருக்குள் வந்துவிடுகிறது. இந்த அதிகாரத்தின் மூலம் வணக்கம், மரியாதை கிடைக்கிறது. அந்த வணக்கத்தையும், மரியாதையையும் சம்பாதிக்காத நபராக, ‘ஜெயலலிதாவுக்கு பின் நாம் தான்… அம்மா அடையாளம் காட்டியது என்னைத்தான்…’ என்கிற மனநிலையிலேயே இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது.
இதனால் ஜெயலலிதா மறைந்த பிறகு எல்லாம் எளிமையாக தன் பக்கம் வந்துவிடும் என்று பகல்கனவு கண்டார். ஆனால், அது உண்மையில்லை. அந்த வணக்கம் எல்லாம் ஜெயலலிதாவுக்கு தான் தனக்கு கிடையாது என்பதை இன்னும் அவர் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் சிக்கல். தன்னை தூக்கிவிட்டவர்களுக்கும், தன் பக்கபலமாக இருந்தவரக்ளுக்கும் துரோகம் செய்தார் என்றே சொல்லலாம். இப்போது அதற்கெல்லாம் அறுவடையாக அரசியலில் ஓர் அனாதை போல் நின்று கொண்டிருக்கிறார்” என்கிறார்கள்.

`தீர்ப்புக்கு பிறகு பேசிக் கொள்ளலாம்’
இவ்வாறாக ஓ.பி.எஸ் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள், அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஓ.பி.எஸ் அணியில் அங்கம் வகிக்கும் மூத்த தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் பேசும் போது, “உயர் நீதிமன்ற பெஞ்சின் இறுதி முடிவு வரும் வரை காத்திருக்கிறோம். அந்த தீர்ப்புக்கு பிறகு பேசிக் கொள்ளலாம்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த ஓ.பி.எஸ், 1972-ல் அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் ஆரம்பித்த போது அதில் இணைந்தார். அதன்பின் பெரியகுளம் நகர வார்டு கழகப் பிரதிநிதி, எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர் என வளர்ந்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் இரு அணியாக பிரிந்து அ.தி.மு.க ஜெயலலிதா தலைமையில் இணைந்தபோது, பெரியகுளம் நகரச் செயலாளரானார். 1996-ல் பெரியகுளம் நகராட்சித் தலைவரானார். அதன்பின் 2001-ல் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த நிலையில், அவரை வருவாய்த் துறை அமைச்சராக்கினார்.

ஜெயலலிதாவுக்கு நம்பிக்கைக்குரியவரானதால், 2001-ம் ஆண்டு இறுதியில் டான்சி நிலபேர வழக்கில் சிறை சென்ற போது, முதல் முறை எம்.எல்.ஏ-வான பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். அடுத்ததாக 2014-ல் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் சிறைத் தண்டனை அறிவித்து, முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, முதல்வர் பொறுப்பை மீண்டும் ஓ.பி.எஸ் வசமே ஒப்படைத்தார். 2016-ல் ஜெயலலிதா மறைந்த பின், அன்றிரவே மீண்டும் ஓ.பி.எஸ் முதல்வரானார். ஆனால், அவரின் முதல்வர் பதவி 2017 பிப்.5-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பிப்.7-ம் தேதி ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்கள் தியானம் செய்ததுடன், தன்னை சசிகலா ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியதாகக் கூறி தர்மயுத்தத்தை ஆரம்பித்தார் ஓ.பி.எஸ்.
சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா சிறைக்கு சென்றார். இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அ.தி.மு.க-வில் இரு அணிகளில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற போட்டியும் தொடங்கியது. ஜெயலலிதா மறைவால் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின் தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம், பழனிசாமி, ஓ.பி.எஸ் அணிகள் 2017 ஆகஸ்ட்டில் இணைந்தன. அடுத்து நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி தேர்வாகினர். இரட்டை தலைமையின் கீழ் அ.தி.மு.க வந்தது. இரு தலைவர்கள் இணைந்தாலும், அவர்கள் கீழ் உள்ள தொண்டர்கள் இணையவில்லை.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு, 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவற்றில் பழனிசாமியின் ஆதிக்கம் அதிகரித்தது. 2021-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின் எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்வி கட்சியில் ஒற்றைத் தலைமைக்கான தேவையை உருவாக்கியது.
கடந்த ஆண்டு, ஜூன் 23-ல் நடைபெற்ற பொதுக்குழுவில், தீர்மானங்கள் செல்லாது என்றும்,ஜூலை 11-ல் மீண்டும் பொதுக்குழு கூடும் எனவும் அறிவிக்கப்பட்டதால், ஓ.பி.எஸ் அங்கிருந்து வெளியேறினர். ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலும் ஓ.பி.எஸ் தரப்புக்கு வெற்றி கிடைக்கவில்லை. அன்று பொதுக்குழு நடைபெற்ற நிலையில், இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்வானதுடன், ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.

அதேநேரம் அ.தி.மு.க அலுவலகத்தில் ஓ.பி.எஸ் நுழைய, கலவரம் வெடித்து, அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது. அதன்பின் அலுவலகம் பழனிசாமி வசம் வந்தது. இது ஓ.பி.எஸ்ஸுக்கு முதல் அடியாக பார்க்கப் பட்டது. அதன்பின், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், பழனிசாமி ஆதரவாளரான தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கியது உச்ச நீதிமன்றம். இது அடுத்த சறுக்கல். அடுத்ததாக உச்ச நீதிமன்றம் பொதுக்குழு தொடர்பான வழக்கில் மீண்டும் பழனிசாமி தரப்புக்கே வெற்றி கிடைத்துள்ளது. அதோடு சமீபத்தி எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றியது. இதன் மூலம் அ.தி.மு.க-வின் முழு கட்டுப்பாடும் ஒற்றை தலைமையின் கீழ் வந்துள்ளது. இதனால் அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ்-ஸின் இருப்பே கேள்விக்குறியாகி உள்ளது. இதை இனி மீட்டெடுப்பாரா… அல்லது அரசியலில் புதிய பாய்ச்சலை உருவாக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
from Tamilnadu News https://ift.tt/25OzBaI
