தி.மு.க அரசு 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பு தேர்தல் சமயத்தில் மக்களிடம் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று `குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000′. ஆனால், கிட்டத்தட்ட தி.மு.க ஆட்சியின் பதவிக்காலம் பாதி முடிவடைந்த பிறகு இப்போதுதான், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 என்ற திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, தகுதியுடைய குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் ரூ.1000 என அறிவித்திருக்கிறது.

இந்த திட்டத்துக்கு `கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என்றும் தி.மு.க அரசு பெயரிட்டது. தகுதியுடைய குடும்பத்தலைவிகளுக்கான வரைமுறைகளையும் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அத்தகைய வரையறைகளில், `ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர்கள், சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர்கள் போன்றோர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது என பல்வேறு வரைமுறைகளைத் தமிழக அரசு வகுத்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து, `தேர்தல் சமயத்தில் மட்டும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு எனக் கூறிவிட்டு, இப்போது மட்டும் தகுதியுடைய குடும்பத் தலைவிகளுக்கு எனப் பிரிப்பது ஏன்?’ என விமர்சனங்களும் எழுந்தன.

இத்தகைய சூழலில் தான், தமிழக நிர்ணயித்திருக்கும் வரைமுறைகள் குறித்து விகடன் வலைதளபக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `குடும்பத் தலைவிகளுக்கு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெறத் தமிழக அரசு நிர்ணயித்திருக்கும் வரைமுறைகள்…’ எனக் கேள்வி கொடுக்கப்பட்டு, `சரியாக வகுக்கப்பட்டிருக்கிறது, ஓரளவுக்கு ஓகே, கடுமையாக இருக்கிறது’ என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக `42 சதவிகிதம் பேர் சரியாக வகுக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, `39 சதவிகிதம் பேர் கடுமையாக இருக்கிறது’ என்றும், `19 சதவிகிதம் பேர் ஓரளவுக்கு ஓகே’ என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
from Tamilnadu News https://ift.tt/pJQcw2j
