தேனி மாவட்டம், குன்னூர் அருகே இருக்கிறது அன்னை இந்திரா நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் மேரி. இவர் தன்னுடைய கை, கால்கள் செயலிழந்துவரும் மகனுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வண்டி வேண்டி, தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு இன்று வந்திருந்தார். அப்போது அவருடைய மனுவை வாங்கிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக ஊழியர்கள், மனுவில் குறிப்பிட்டிருந்த கோரிக்கையை அடித்துவிட்டு, மாற்றி எழுதி, அவர்களை கலெக்டரிடம் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. “மகனின் உயிரைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் என்னுடைய கோரிக்கையைக்கூட கலெக்டரிடம் கூறவிடாமல், அதிகாரிகள் தடுக்கின்றனர்” என மேரி தன்னுடைய மகனை வைத்துக்கொண்டு கண்ணீர்விட்டு அழுத காட்சி, அங்கு மனு கொடுக்க வந்திருந்தவர்களை கலங்கச் செய்தது.

இது குறித்து நம்மிடம் பேசிய மேரி, “என்னுடைய கணவர் ஹெச்.ஐ.வி பாதிப்பால் 2017-ல் உயிரிழந்துவிட்டார். எனக்கு இரண்டு மகன்கள். இதில் 18 வயதான மூத்த மகனுக்கும் ஹெச்.ஐ.வி பாசிட்டிவ். சிறுவயதிலேயே பாதிப்பு கண்டறியப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்கிடையே ப்ளஸ் டு படித்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென கை, கால்கள் செயலிழந்து, தலை நிற்காமல் போனது. மருத்துவர்கள் தொடர்ச்சியாக மருந்து எடுத்துக்கொள்ளாததுதான் பிரச்னைக்குக் காரணம் எனக் கூறிவிட்டனர்.
இதனால் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியதாகிவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய மகனைக் காப்பாற்ற மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறேன். நடக்க முடியாத மகனை அழைத்துச் சென்று வருவதில் சிரமம் உள்ளது, எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான வண்டி வழங்க ஏற்பாடு செய்யுமாறு மனு எழுதிக் கொண்டு, மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்தேன்.

அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக ஊழியரான கார்த்திக் என்பவர், எனது மனுவை வாங்கிப் பார்த்துவிட்டு அருகே இருந்த பெண் ஒருவரிடம் கொடுத்து, `ஹெச்.ஐ.வி கேஸ்’ என மாற்றிக் கொடுக்கும்படி கூறினார். அவரும் என்னுடைய மனுவின் கோரிக்கையை அடித்துவிட்டு, `ஹெச்.ஐ.வி சிகிச்சை எடுக்க வேண்டி மனு’ என மாற்றி எழுதினார்.
மகனை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு, எங்கு யாரிடம் மனு கொடுப்பது என விசாரித்துக் கொண்டிருந்த என்னிடம், செய்தியாளர்கள் விசாரித்துக் கொண்டிருந்ததை மாற்றுத்திறனாளி நல அலுவலக அதிகாரிகள் பார்த்தனர். அதையடுத்து எங்களை கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். கடைசியாக கலெக்டரிடம் என் மகனுக்கு வண்டி வேண்டும் எனக் கூறினேன். அவர் ஏற்பாடு செய்யலாம் எனக் கூறி அனுப்பினார்” என்றார்.

கலெக்டரிடம் கொடுப்பதற்காக வைத்திருந்த மனுவை, அடித்து திருத்தி மனுவின் கோரிக்கையை மாற்றியது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக ஊழியர் கார்த்திக்கிடம் கேட்டோம். “ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் வண்டி வழங்க இயலாது. எனவேதான் மனுவை மாற்றி எழுதிக் கொடுத்தோம். இது குறித்து கலெக்டரிடம் விளக்கி விட்டோம்” என்றார்.

இந்தச் சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சமூக ஆர்வலர்கள், “படிப்பறிவில்லாத மக்களின் பெரும்பாலான கோரிக்கைகள் முறையாக கலெக்டர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படுவது இல்லை. குறைதீர் கூட்டதுக்கு வரும் மனுக்களை வெளியே வைத்து வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஏற்றவகையில் திருத்தி அனுப்பிவைக்கின்றனர். மேலும் இந்தப் பிரச்னை தங்கள் துறைக்கு வராது என தட்டிக்கழித்து அனுப்பிவிடுகின்றனர். அதையும் மீறி கலெக்டரின் கவனத்துக்குச் சென்றால், பொய்யான தகவல்களைச் சொல்லி அதிலிருந்து தப்பிக் கொள்கின்றனர். இதை கலெக்டர் தலையிட்டுதான் சரிசெய்ய வேண்டும்” என்றனர்.
from Tamilnadu News https://ift.tt/K3s79Wm
