ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, 2021-ஆம் ஆண்டு ஜூலையில் தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக அண்ணாமலையின் செயல்பாடுகள் பல்வேறு சர்ச்சைகள், விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இதற்கு முன்பிருந்த தலைவர்களில் இருந்து வேறுபட்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் அண்ணாமலை, தி.மு.க அரசுக்கு எதிரான பிரசாரங்கள், போராட்டங்களை நடத்துவதில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வையே பல சமயம் பின்னுக்குத்தள்ளி ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அண்ணாமலையின் செயல்பாடுகளால், பா.ஜ.க-வுக்கு பதில் தரும் வகையில், `நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி’ என அ.தி.மு.க வலிந்து வந்து பதில் தரக்கூடிய நெருக்கடிக்கும் ஆளானது.

அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அ.தி.மு.க இருந்தாலும், மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சி யார் என்பதில், அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் போட்டி இருந்துகொண்டே இருக்கிறது. பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டூ அணை விவகாரம் குறித்து பேசாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என பா.ஜ.க அறிவித்தது. அதற்குப் போட்டியாக மாநில அரசைக் கண்டித்து 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அ.தி.மு.க அறிவித்திருக்கிறது.
திமுக-வினர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி, திமுக ஃபைல்ஸ் பாகம்-1 என ஏப்ரல் மாதம் ஒரு பட்டியலை வெளியிட்டு, அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இம்மாத இறுதியில் இரண்டாம் பாகத்தை வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறார் அண்ணாமலை. இவ்வாறாக தமிழக பா.ஜ.க தலைவராக இதற்கு முன்பிருந்த தலைவர்களைக் காட்டிலும், கூடுதல் வெளிச்சத்தோடு லைம்லைட்டில் இருந்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
அதேசமயம் அண்ணாமலையின் செயல்பாடுகள் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தாமலும் இல்லை. ஊடக சந்திப்புகளில் அண்ணாமலை பேசிய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவரான பிறகு, ரெளடிகளும், குற்றப்பின்னணி கொண்டவர்களும் பலர் கட்சியில் இணைந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பா.ஜ.க-வில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டதும், மேலும் பலர் ஓரங்கப்பட்டதும் அண்ணாமலை மீது விமர்சனங்களை ஏற்படுத்தின. பா.ஜ.க-வில் இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தினரை ஒடுக்குகிறார் என நடிகர் எஸ்.வி.சேகர் ஒருபக்கம் கடும் குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை யாரென்றே தெரியாது, தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி இருக்கிறதா என்று கிண்டல் பேசினார் சுப்பிரியமணியன் சுவாமி. ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என அண்ணாமலை கூறிய கருத்தும் ஆர்.என்.ரவியோடு மோதல்போக்கை ஏற்படுத்துவதாக இருந்தது.

ஆனால் அண்ணாமலையின் வருகைக்குப் பிறகுதான் பா.ஜ.க தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வளர்திருக்கிறது என அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் எல்.முருகன் இருந்தபோது ஏற்படுத்தி வைத்த கட்டமைப்பின் மீதுதான் அண்ணாமலை பயணித்துக்கொண்டு இருக்கிறார், எப்போதும் தன் மீது ஊடக வெளிச்சம் படும்படியே அண்ணாமலை இருப்பதால் கட்சி வளர்ந்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் என்ற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது. இத்தகைய சூழலில் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்பே அவரை மாற்றப் போகிறார்கள் என்ற பேச்சுக்களும் அடிபடத் தொடங்கியிருக்கின்றன.
கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களை டெல்லி மேலிடம் விரும்பவில்லை என்றும் சொல்லப்பட்டது. அதனால்தான் அ.தி.மு.க-வினரையும் அண்ணாமலையையும் டெல்லிக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பிவைத்தார் அமித் ஷா. அதன்பிறகும் கூட ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க கண்டன தீர்மானமே நிறைவேற்றியது.
எனவே அண்ணாமலையை நீக்கிவிட்டு, தமிழக பா.ஜ.க தலைவராக வேறொருவர் நியமிக்கப்பட உள்ளாரா என்பது பற்றி கமலாலய வட்டாரத்தில் விசாரித்தோம். “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி-யாகப் போகிறார், அதனால் கட்சிப் பதவியில் இருந்து அவர் நீக்கப்படவிருக்கிறார் என 2 நாள்களாக சமூக வலைத்தளங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பொய்யான செய்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரான மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.

அதற்கு முன்பு அந்த மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தலும் வந்துவிடும். இப்போது அங்கு காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. வெற்றிக் கணக்குகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அதனால் ராஜஸ்தானில் இருந்து அண்ணாமலை எம்.பி-யாகப் போகிறார் என எப்படி செய்தி பரவியது என்றே தெரியவில்லை. அண்ணாமலையை மாற்றுவதாக இருந்தால் சமீபத்தில் 4 மாநில தலைவர்கள் மாற்றப்படும்போதே மாற்றியிருப்பார்கள். அவர் மீது தேசியத் தலைமை மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. அதனால்தான் நடைப்பயணத்தை தொடங்கிவைக்க கூட அமித் ஷா-வே நேரடியாக வருகிறார். எனவே அண்ணாமலையை மாற்றப்போவதாக இதுவரை எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை” என்றனர்.
மேலும், தேர்தல் நேரத்தில், மாநில தலைமை மாற்றம் என்னும் நடவடிக்கையை டெல்லி பாஜக எடுக்க வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
from Tamilnadu News https://ift.tt/PGfSdM7
