ஆஸ்திரோலியாவின் மேற்குப் பகுதியிலிருக்கும் பெர்த் என்ற இடத்திலிருந்து வடக்கே 155 மைல் தொலைவில் அமைந்திருக்கும் கிரீன் ஹெட் கடற்கரை ஓரத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு வித்தியாசமான உலோகத்தாலான ராட்சத சிலிண்டர் போன்ற உருளை வடிவம் கொண்ட பொருள் ஒன்று கரை ஒதுங்கியிருக்கிறது. அந்தப் பொருள் சுமார், 2.5.மீ அகலமும், 2.5-3.மீ நீளமும் கொண்டது எனக் கூறப்படுகிறது. கரை ஒதுங்கிய பொருளைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்கு இந்தச் செய்தியைத் தெரிவித்த நிலையில், தற்போது இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இது குறித்த அறிக்கையினை காவல் துறை வெளியிட்டது. அதில், “இது என்ன பொருள் என இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாததால், பாதுகாப்பு கருதி பொதுமக்கள் இதன் அருகில் செல்லாமல் விலகியிருக்க வேண்டும் “ எனச் சொல்லப்பட்டிருந்தது.

அப்பகுதியைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து நிபுணர் தாமஸ் “இந்த சிலிண்டர் போன்ற பொருள் கடந்த 12 மாதங்களில் விண்ணில் செலுத்தப்பட்ட ஏதேனும் ஒரு ராக்கெட்டின் உதிரி பாகமாக இருக்கலாம். அது எரிபொருள் சிலிண்டராக இருப்பின் அது இந்தியாவைச் சேர்ந்த ஏதேனும் ஒரு ராக்கெட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். அல்லது வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த விமானத்தின் பாகமா? என பிற நாடுகளுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
சிலர், 2014-ல் 239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனச் சொல்கின்றனர். ஆனால் இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நிபுணர் தாமஸ், “இது அந்த மலேசிய விமானமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போனது. அப்படி அது தற்போது கரை ஒதுங்கியிருந்தால் அதில் ஏராளமான சிதைவுகள் இருந்திருக்கக்கூடும். இதில் அதற்கான எந்த அடையாளமும் இல்லை. எனவே இது போன்ற பொய்யான வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என அவர் கூறியிருக்கிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் இது சமீபத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலத்தின் உதிரி பாகமாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் முறையான விசாரணைக்குப் பிறகு இது பற்றிய அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்படும் என அந்த நாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
from Tamilnadu News https://ift.tt/EFmNxqQ
