காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பாட்னாவில் நடைபெற்ற முதல் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 16 எதிர்க்கட்சிகள் பங்கேற்றிருந்த நிலையில், இரண்டாவது கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்றிருக்கின்றன. அதேசமயம், கடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சோனியா காந்தி, இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பதால் 2024 தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூரு

பா.ஜ.க-வை வீழ்த்துவது குறித்து எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஒருபக்கம் ஆலோசனைக் கூட்டம் நடத்த, மறுபக்கம் பா.ஜ.க-வும், தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்பாக டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருக்கிறது. இதில் 38 கட்சிகள் பங்கேற்பதாக நட்டா நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்றுவரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பிரதமர் மோடி விமர்சித்திருக்கிறார், குறிப்பாக தி.மு.க-வைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

முன்னதாக அந்தமான் நிக்கோபாரிலுள்ள சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் ஒன்றை காணொளிக் காட்சி வாயிலாக மோடி இன்று திறந்துவைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குக் குடும்பம்தான் முதல் முன்னுரிமை. அதைத்தாண்டி நாட்டுக்காக அவர்களிடம் ஒன்றுமில்லை. அதுதான் அவர்களின் குறிக்கோள். ஊழலை ஊக்குவிக்கவே அவர்கள் ஒன்றுகூடுகின்றனர். அவர்களால் ரூ.20 லட்சம் கோடி ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.

மோடி

இந்தியாவின் அவல நிலைக்குக் காரணமானவர்களே இப்போது 2024 தேர்தலுக்காக தங்களின் கடைகளைத் திறந்திருக்கின்றனர். நிச்சயம் அவர்களின் கடைகளில் சாதிவெறிக்கும், மிகப்பெரிய அளவிலான ஊழலுக்கும் உத்தரவாதம் உண்டு. அதோடு அவர்களின் இந்தச் சந்திப்புக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அதாவது அங்கு, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவருபவர்கள் மிகவும் மரியாதையுடன் பார்க்கிறார்கள். மொத்த குடும்பமும் ஜாமீனில் வெளியிலிருந்தால் இன்னும் அதிக மரியாதையுடன் பார்க்கப்படுகிறார்கள். ஒருவர் ஒரு சமூகத்தை அவமதித்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார் என்றால் அவரும் மதிக்கப்படுகிறார்.

மோடி

ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகளைக் குறித்து கேட்டால் அவர்கள் எதுவும் பேசாமல் மௌனமாகிவிடுகின்றனர். மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலில் வன்முறை வெடித்தபோதும் அமைதி காத்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தங்களின் பாதுகாப்புக்காக மன்றாடினர். ஆனால், அவர்களின் தலைவர்களோ தங்களின் தொண்டர்களை அத்தகைய இக்கட்டான சூழலில் அப்படியே விட்டுச் செல்லுமளவுக்கு சுயநலமாக இருந்தனர். அதேபோல், தமிழகத்திலிருந்து (தி.மு.க) இப்போது பல்வேறு ஊழல்கள் வெளிவருகின்றன. அவர்களுக்கும் இவர்கள் நற்சான்றிதழ் அளிக்கிறார்கள், அவர்களை குற்றமற்றவர்கள் என்கிறார்கள்” என்று வெளிப்படையாக எதிர்க்கட்சிகளையும், மறைமுகமாக தி.மு.க-வையும் சாடினார்.

from Tamilnadu News https://ift.tt/KsFyxtZ