தமிழருவி மணியனும்… தமிழக அரசியலும்!

தமிழ்நாட்டில் அரசியலில் பலராலும் அறியப்பட்ட அரசியவல்வாதிதான் தமிழருவி மணியன். இந்திய தேசிய காங்கிரஸில் பயணித்தவர், பெருந்தலைவர் காமராஜர் மறைவுக்குபின்னர், அங்கிருந்து விலகி, ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் அங்கிருந்து, இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே ஜனதா தளத்தில் இணைந்து, அதன் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளராக இருந்தார். பின்னர் லோக்சக்தியிலும், அதிலிருந்து பிரிந்து, தமிழக லோக்சக்தி என்ற கட்சியை தொடங்கினார். அங்கிருந்து தமிழ் மாநில காங்கிரசில் இணைந்தார். த.மா.கா மீண்டும் காங்கிரஸோடு இணைக்கப்பட்டபோது, அவரும் காங்கிரஸில் இணைந்தார்.

ரஜினியுடன் தமிழருவி மணியன்

பின்னர், 2009-ல் காந்திய மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கி, அரசியல் சார்ப்பற்று இயங்குவதாக அறிவித்தவர், 2014-ல் காந்திய மக்கள் கட்சியாக அதை மாற்றினார். 2020-ல் நடிகர் ரஜினிகாந்த் தான் தொடங்கப்போவதாக அறிவித்த கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், ரஜினி கட்சித் தொடங்காததால், தனது கட்சியின் பெயரை, காமராசர் மக்கள் கட்சியென 2022-ல் பெயரை மாற்றினார்.

இந்த கட்சியின் மாநில பொதுக்குழு சமீபத்தில் மதுரை திருநகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

மாநில பொதுக்குழு

அந்த நிகழ்வில், தமிழருவி மணியன் செய்தியாளர்களை சந்தித்தபோது, “நாட்டின் நலன் கருதி மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் வர வேண்டும். பா.ஜ.க கூட்டணியில் காமராஜர் மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, சமூக நீதி கட்சி, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதேநேரம், பா.ம.க-வுக்கும், தே.மு.தி.க-வும் பா.ஜ.க கூட்டணிக்குள் வரவேண்டும்” எனக் கூறிருந்தார். குறிப்பாக தமிழருவி மணியன், பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக குறித்து எதுவுமே பேசவில்லை. அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அருகில் இருக்கும்போது, மணியன் இப்படி பேசியதால் சர்ச்சை வெடித்து இருக்கிறது.

இதுதொடர்பாக பா.ஜ.க சீனியர்களிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முடிவாகிவிட்டது. அதன்படிதான், ஜூலை 18(இன்று) நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அ.தி.மு.க, பா.ம.க., த.மா.கா-வுக்கும் பங்கேற்கிறார்கள். இந்நிலையில், அண்ணாமலையை பக்கத்தில் வைத்துக் கொண்டு, தமிழருவி மணியன் பேசியது அவசியமற்றது. இதற்கு அண்ணாமலையும், ஜி.கே.வாசனும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கவேண்டும். ஆனால், அதை மெளனமாக கடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அண்ணாமலை

கடந்த 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க அ.தி.மு.க அல்லாத மாற்று கூட்டணியை கொண்டுவர தமிழருவி மணியனும் முயன்றார். அந்த அணியில் பா.ஜ.க, தே.மு.தி.க, ம.தி.மு.க கட்சிகள் இருந்தன. இந்த கூட்டணியில் கன்னியாகுமரியில் பா.ஜ.க-வும், தர்மபுரியை பா.ம.க-வும் கைப்பற்றியது. ஆனால், இப்போது ம.தி.மு.க., தி.மு.க கூட்டணியில் இருக்கிறது. தே.மு.தி.க தனது பலத்தை இழந்துவிட்டது. அ.தி.மு.க-வை தவிர்த்து கூட்டணி அமைக்க அண்ணாமலை முயல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அதற்காக தமிழருவியை வைத்து ஆழம் பார்த்து இருக்கிறார். இது கூட்டணிக்குள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அ.தி.மு.க இல்லாமல் பா.ஜ.க தேர்தலை சந்திப்பது அரசியல் தற்கொலைக்கு சமமானது. இதுகுறித்து தலைமையிடம் பேசவிருக்கிறோம்.” என்றனர் விரிவாக…

ஜெயக்குமார்

தமிழருவி மணியின் கருத்தை முன்வைத்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணியில் யார் இருக்கவேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்ற பாஜகவின் அழைப்பை ஏற்று அ.தி.மு.க பங்கேற்கிறது. தமிழருவி மணியின் கருத்தையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். பெரிதாக எடுத்துக் கொள்ளவும் கூடாது.” என்றார் சுருக்கமாக…

ஆர்.பி.உதயகுமார்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரோ… “எனக்கு குற்றால அருவிதான் தெரியும்… ஆயிரம் பேர் ஆயிரம் கருத்தை சொல்வார்கள். அதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது…” என்று கடந்து சென்றுவிட்டார்.

தமிழருவி மணியனின் கோரிக்கையை, அவர் கோரிக்கை வைத்த கட்சிகளாவது சீரியஸாக எடுத்துக்கொள்ளுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

from Tamilnadu News https://ift.tt/EKGtLNl