தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கில், 2018-ல் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. முன்னதாக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி, ரூ.4,800 கோடி நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு மூலம் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாகவும், இதனைச் சிறப்பு விசாரணைக் குழு மூலம் விசாரித்து நடவடிக்கை வேண்டுமெனவும் 2018-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்திருந்தார்.

அப்போதே இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் விசாரணை நடத்துமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டது. பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பு இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு, வழக்கை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமெனச் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
அதன்படி, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு, தங்களின் விசாரணையின் அறிக்கையை ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஏற்காததால், மீண்டும் விசாரணை நடைபெறுவதாகத் தெரிவித்தது. அதையடுத்து ஆர்.எஸ்.பாரதி தரப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாகத் தனது வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டுமெனக் கோரியது.

இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு, `2018-ல் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். ஆர்.எஸ்.பாரதி வழக்கை திரும்பப்பெற அனுமதிக்கக் கூடாது’ என வாதம் செய்தது. பின்னர் நீதிபதியோ, 2018-ல் நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் மூடிமுத்திரையிட்டுத் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆராய்வதாகவும், அதன் அடிப்படையில் வழக்கில் முடிவெடுப்பதாகத் தெரிவித்தார்.

இத்தகைய சூழலில் தான், இன்று நடைபெற்ற விசாரணையில், ஆர்.எஸ்.பாரதியின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தன்னுடைய தீர்ப்பில், “2018-ல் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் எந்தவொரு தவறும் இல்லை. எனவே, ஆரம்பகட்ட விசாரணையில் குறைபாடு காணமுடியாது. அதுமட்டுமல்லாமல் ஆட்சி மாற்றத்தின் காரணமாகப் புதிதாக விசாரணை நடத்தவேண்டிய அவசியமும் இல்லை” என்று கூறினார்.
from Tamilnadu News https://ift.tt/LxvY2Xc
