மும்பையில் பா.ஜ.க. எம்.பி.யாக இருந்தவர் கிரீத் சோமையா. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது ஊழல் புகார் கூறியவர். ஏராளமான கல்வி நிறுவனங்கள் நடத்தும் கிரீத் சோமையா, அடிக்கடி ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தக்கூடியவர். கொரோனா காலத்தில் சிறப்பு முகாம்கள் அமைத்து சிகிச்சையளித்ததில் நடந்த ஊழல் தொடர்பாக அமலாக்கப்பிரிவு நடத்திய விசாரணை தொடர்பான புகாரையும் கிரீத் சோமையாதான் கொடுத்திருந்தார். தற்போது கிரீத் சோமையா பெண் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வீடியோ மராத்தி டிவி சேனல் ஒன்றிலும் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் கிரீத் சோமையா மிகவும் ஆக்ரோஷமான முறையில் நடந்து கொள்வது போல் இருக்கிறது. சம்பந்தப்பட்ட பெண் யார் என்பது முகம் மறைக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோ பா.ஜ.க.தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவை வெளியிட்ட டிவி நிர்வாகம் தங்களிடம் இது போல் பல வீடியோ காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக எப்போதும் ஊழல் புகார் கூறும் கிரீத் சோமையா, இது போன்ற காரியத்தில் ஈடுபட்டாரா அல்லது அவருக்கு எதிராக எதாவது சதி நடந்துள்ளதா என்று தெரியவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வித்யா சவான் கூறுகையில், “கிரீத் சோமையா இது போன்ற ஆபாச செயல்களில் ஈடுபடும் போது மற்றவர்கள் மீது சேற்றை வாரி வீச அவருக்கு எந்த வித தார்மீக உரிமையும் இல்லை.இந்த வீடியோ உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ரூபாலி இது குறித்து கூறுகையில், “வீடியோ மீதான நம்பகத்தன்மை குறித்து விசாரித்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தெரிவித்தார். காங்கிரஸ் நிர்வாகி யசோமதி தாகுர் இது குறித்து கூறுகையில், “ஒழுக்கத்தை பற்றி அடிக்கடி பேசும் பா.ஜ.க. தலைவர்கள் கிரீத் சோமையாவின் செயலுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இருக்கிறதா? கிரீத் சோமையா தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிரீத் சோமையா

இந்த வீடியோ வெளியானவுடன் கிரீத் சோமையா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு எழுதிய கடிதத்தில், “எனக்கு எதிரான வீடியோ குறித்து முழுமையாக விசாரிக்கப்படவேண்டும். எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நான் அப்பாவி. நான் யாருக்கு எதிராக செயல்பட்டேனோ அந்த முக்கிய பிரமுகர்கள் இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

from Tamilnadu News https://ift.tt/ErhIO5D