1956-ம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த நாளையே இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மாநில நாளாக கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில் இன்று ஜூலை 18-ஐ நாம் தமிழ்நாடு நாளென தொடர்ந்து 2வது வருடமாக கொண்டாட காரணமென்ன? சமீபத்தில் தமிழகம் – தமிழ்நாடு என மாநிலத்தின் பெயரில் அனல் பறக்கும் விவாதங்கள் ஆளுநருக்கும் முதல்வருக்கும் நடைபெற்றது என்பது நாடே அறியும்.

அதுபோல இம்மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் வரவும் உயிர் தியாகங்கங்களும் போராட்டங்களும் நடைபெற்றுள்ளது. அப்படி தமிழ்நாடு என பெயர் சூட்ட 1968-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளை தான் “தமிழ்நாடு நாள்” என இன்று கொண்டாடி கொண்டிருக்கிறோம். அதன் நீண்ட வரலாற்றினை மிக சுருக்கமாக மீள் பார்வை செய்யலாம் வாருங்கள்.
அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பேசுபவர்கள் அதிகமாகவே இருந்தார்கள். அதன் பிறகு மொழிகளைக் கொண்டு தனித்தனியாக மாநிலங்களும் பிரிக்கப்பட்டன. அப்போது இன்றைய தமிழ்நாட்டிற்கு “மெட்ராஸ் ஸ்டேட்” என்று வைக்கப்பட்டது.

அந்நிலையில் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார், 12 கோரிக்கைகளுடன் உண்ணாவிரதம் இருந்தார். அதை அன்றைய முதல்வர் காமராஜர் நிராகரித்தார். இருந்தும் உண்ணாவிரதத்தை பின்வாங்காமல் தொடர்ந்த சங்கரலிங்கனார் போராட்டத்தின் 76-ம் நாளில் உடல் நிலை சரியில்லாமல் 1956-ம் ஆண்டு அக்டோபர் 13 தேதி உயிர்நீத்தார்.
அவரது மறைவுக்கு பிறகு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 1957-ல் தீர்மானம் கொண்டுவந்தனர். அதன் வாக்கெடுப்பு தோல்வியை சந்தித்தது. பிறகு 1961 ஆம் ஆண்டு சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்தை காமராஜர் தள்ளி வைக்க எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனால் அதுவும் தோல்வியை தழுவியது.

இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குப்தா தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார். இது பேசு பொருளாக மாற காங்கிரஸ் கட்சினர் “ அன்றைய மெட்ராஸ் ஸ்டேட் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்ற பெயர்கள் கொண்டு இருந்தது” என வாதம் வைத்தனர். மேலும் “இப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றுவதால் என்ன பயன்?” என்று வினா தொடுத்தனர். இதனை எதிர்த்து பேசிய அண்ணாதுரை சங்க இலக்கியங்களில் தமிழ் நாடு என பெயர் உள்ளது என்று இலக்கிய சான்றினையும், கீழ் சபை மேல் சபை என்று இருந்த பெயர்களுக்கு எதற்கு ராஜ்ய சபா, லோக் சபா என பெயர் வைக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்தார். இதை தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு மற்றொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதுவும் பெரும்பான்மை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டது.
அதன் பிறகு 1967 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சி பொறுப்பேற்றார். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழ்நாடு அரசு – தலைமைச் செயலகம்’ என்ற புதிய பெயர்ப்பலகை மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் பிறகு 1968 நவம்பர் 23 ஆம் நாள் தமிழ்நாடு பெயர் மாற்றம் நாடாளுமன்ற மசோதாவில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்தப் போராட்ட வரலாற்றில் ஜூலை 18ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மான நாளைக் கொண்டாட வேண்டும் என்று 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில் இன்றைய தினம் தமிழ்நாடு நாளாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.
from Tamilnadu News https://ift.tt/T36yVur
