மும்பை எப்போதும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இலக்காக இருந்து வருகிறது. அடிக்கடி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் மிரட்டல் விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஏற்கனவே மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் மும்பை போக்குவரத்து போலீஸாருக்கு இன்று காலையில் ஒரு மிரட்டல் மெசேஜ் வந்தது. அதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அதோடு மும்பையில் இதற்கு முன்பு 26/11ல் நடத்தப்பட்டது போன்ற ஒரு தாக்குதலுக்கு தயாராகும்படி அந்த மிரட்டல் மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு மிரட்டல் வந்தது. ஆனால் அந்த மிரட்டலில் பாகிஸ்தானில் இருந்து 4 குழந்தைகளுடன் இந்தியாவிற்கு காதலனை தேடி ஓடி வந்த சீமா என்ற பெண்ணை உடனே இந்தியா அனுப்பவில்லையெனில் மும்பையில் 26/11ல் நடத்தப்பட்டது போன்ற ஒரு தாக்குதல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மும்பை உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு ஆள்களை தேர்வு செய்த அர்மான் என்பவனை உத்தரப்பிரதேச போலீஸார் மும்பை போலீஸாருடன் இணைந்து கைது செய்தனர். முன்னதாக மொகமத் ரியாஸ் என்பவனை உத்தரப்பிரதேச போலீஸார் கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தி, அர்மான் என்பவனை கைது செய்துள்ளனர். அவரை உத்தரப்பிரதேச போலீஸார் தங்களது மாநிலத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர். அர்மானுக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை சேர்ந்தவர்களுடன் நேரடி தொடர்பு இருப்பதாக போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.
from Tamilnadu News https://ift.tt/1LmUSKy
