2001-06 அ.தி.மு.க அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது, 2006-11 தி.மு.க ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்கு தொடுத்தது. தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் அந்த வழக்கு தொடர்ந்து நடந்துவருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை, மத்திய குற்றப்பிரிவு பதியும் வழக்குகளில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்துக்கான முகாந்திரங்கள் கண்டறியப்பட்டால், மத்திய அமலாக்கத்துறையும் தனியே வழக்கு பதிந்து விசாரிப்பது வழக்கம். அதன்படி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிந்த வழக்கை அடிப்படையாகவைத்து, 2020-ம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்காகப் பதிவுசெய்தது அமலாக்கத்துறை.

அனிதா மீதான வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அமலாக்கத்துறையின் துணை இயக்குநர் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், “தமிழ்நாடு அரசில் தற்போது அமைச்சராக இருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன். அவர்மீதான வழக்கை நடத்தவேண்டியது மாநில அரசுதான். ஆனால், அனிதாவின் நலன்களைக் காப்பதில்தான் மாநில அரசு அக்கறையோடு செயல்படுகிறது. இதனால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும். எனவே, நீதிமன்ற சட்டப்பிரிவு 301 (2), 302 ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கில், அமலாக்கத்துறையை வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக (Assist the Prosecution) சேர்த்துக்கொள்ள வேண்டும்”என்று குறிப்பிட்டிருந்தார்.
அமலாக்கத்துறையின் வாதத்தை லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கவில்லை. “நாங்கள் தீவிரமாக விசாரித்து முடித்துவிட்டோம். இப்போது, புதிதாக அமலாக்கத்துறை உள்ளே நுழைந்து உதவுவதாகச் சொல்வது, வழக்கின் போக்கை பாதிக்கலாம். அவர்களின் உதவி தேவையில்லை” என்பதை வாதமாகவும் முன்வைத்தனர்.

இந்த நிலையில்தான், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று (ஜூலை 19) தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வழக்கில் உதவுவதற்காக, அமலாக்கத்துறை செய்திருந்த மனு மீது இன்று முடிவெடுக்கவிருக்கிறது நீதிமன்றம். இதற்கிடையே, புதிய கோரிக்கை ஒன்றை முன்வைக்கவும் அமலாக்கத்துறை தயாராகிறது என்கிறார்கள் சீனியர் அதிகாரிகள்.
“அனிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், எங்களுடைய உதவி தேவையில்லை என்பதைத் தொடக்கத்திலேயே லஞ்ச ஒழிப்புத்துறை கூறிவிட்டது. அதனால், இந்த வழக்கு தொடர்பாக எங்களிடம் கிடைத்திருக்கும் ஆவணங்கள், ஆதாரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கோரிக்கை வைக்கவிருக்கிறோம். அந்த ஆதாரங்களைப் பார்த்துவிட்டு, நீதிமன்றமே ஒரு முடிவெடுக்கட்டும்” என்றனர்.
ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் மூலமாக நீதிமன்றத்தில் புதிய வாத, பிரதிவாதத்தை உருவாக்கத் தயாராகிறது அமலாக்கத்துறை. அமலாக்கத்துறையின் சார்பில், மூத்த வழக்கறிஞர் ரமேஷ் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

“அமலாக்கத்துறை இந்த புது ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்கள் வசமிருக்கும் ஆதாரங்களை அவ்வளவு எளிதாக நீதிமன்றத்தாலும் புறம்தள்ள முடியாது. விசாரணை செய்துதான் ஆக வேண்டும். அனிதாவுக்கு சட்டரீதியாக வலுவாகவே ‘செக்’ வைத்திருக்கிறது” என்கிறார்கள் இந்த வழக்கைத் தொடர்ந்து பார்த்துவரும் மூத்த வழக்கறிஞர்கள் சிலர்.
“ஒருவேளை சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணைக்கு உதவ அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டால், இதையே முன்மாதிரியாக வைத்து தி.மு.க அமைச்சர்களுக்கு எதிரான எல்லா சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமலாக்கத்துறை உள்ளே நுழைந்துவிடும்” என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில். அமலாக்கத்துறையின் ஆட்டம் சூடாகிக்கொண்டே போகிறது.
from Tamilnadu News https://ift.tt/yhUMSao
