அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க இலக்கிய அணிச் செயலாளருமாகிய வைகைச்செல்வன் நாமக்கல்லில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அதிரடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். இதன் மூலமாக, மக்கள் விரோத அரசாங்கம் தி.மு.க என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. லஞ்சம், லாவண்யம் இந்த ஆட்சியில் பெருகிவிட்டது. எங்கு பார்த்தாலும், எந்தத் துறையிலும் லஞ்சம், லஞ்சம், லஞ்சம்தான்… மேலும், இந்த தி.மு.க அரசாங்கம் மக்களை வாட்டி வதைக்கின்றது.

ஒவ்வோர் அமைச்சரும் மக்கள் நலப்பணியில் தங்களை அர்ப்பணிக்காமல், தனக்கு என்ன கிடைக்கும், தன்னுடைய கட்சிக்கு என்ன கிடைக்கும், முதலமைச்சரின் குடும்பத்துக்கு என்னவெல்லாம் சொத்து சேர்க்கலாம், பணம் கொடுக்கலாம் என முழுக் கவனம் செலுத்துகின்றனர்.
இந்தக் காரணத்தால், கடந்த இரண்டு ஆண்டுக்கால தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதோடு, சொத்து வரி, மின்சாரக் கட்டணம் உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு. குடிநீர் வரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் உயர்வை அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. இந்த அரசு, பணம் சம்பாதிப்பதையே தன்னுடைய இலக்காக வைத்திருக்கின்ற காரணத்தால்தான், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்துகொண்டு இருக்கின்ற செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த முறை ரெய்டு நடந்தது. தற்போது, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடக்கிறது.
இது மக்கள் மத்தியில் இந்த அரசுக்குப் பெரிய கெட்ட பெயரையும், அவப்பெயரையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. கர்நாடகா தேர்தலின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை பா.ஜ.க முன்வைத்தாலும், காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது. மக்கள்தான் ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள். அப்படிப்பட்ட நேரத்தில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கூட்டம் கூட்டுவது, களம் அமைப்பது ஒவ்வொரு தேர்தல் களத்தில் இயல்பானதுதான்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தையும், ரெய்டையும் முடிச்சு போடத் தேவையில்லை. தேர்தல் நேரத்தில்தான் ஒவ்வொரு கட்சியும் கூட்டணியை அறிவிக்கின்றன. அப்படிக் கூட்டணிகளை அமைக்கக்கின்றபோதுதான் இடங்கள், இடங்கள் ஒதுக்கீடு குறித்து அ.தி.மு.க தலைமை வெளியிடும்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/KBmuQpD
