மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்த மாத தொடக்கத்தில் இரண்டாக உடைந்தது. அஜித் பவார் உட்பட ஒன்பது பேர் பா.ஜ.க கூட்டணி அரசில் அமைச்சர்களாகப் பதவியேற்றிருக்கின்றனர். அவர்களின் பதவியேற்பால் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருக்கும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார், இப்போது பா.ஜ.க கூட்டணி அரசிலும் துணை முதல்வராகவே நீடிக்கிறார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி வைத்ததால்தான் பிரிகிறோம் என்று சொல்லி, சிவசேனாவை இரண்டாக பிரித்துக்கொண்டு ஏக்நாத் ஷிண்டேயும் அவரின் ஆதரவாளர்களும் வெளியில் வந்தனர். ஆனால், இப்போது அதே சிவசேனா மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சியைப் பகிர்ந்துகொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதோடு சிவசேனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நிதித்துறை அஜித் பவாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கூட்டம்

இந்த நிலையில், புதிய திருப்பமாக இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த உத்தவ் தாக்கரே, துணை முதல்வர் அஜித் பவாரைச் சந்தித்துப் பேசினார். உத்தவ் தாக்கரேயுடன் அவரின் மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள் உடனிருந்தனர்.

மரியாதை நிமித்தமாக நடந்த இந்தச் சந்திப்பு குறித்து உத்தவ் தாக்கரே பேசுகையில், “திருதராஷ்டிரன் போன்று மகாராஷ்டிரா குருடு கிடையாது. இது சத்ரபதி சிவாஜியின் மாநிலம். அஜித் பவார் ஆட்சியில் சேர்ந்தவுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். மகாவிகாஷ் அகாடி அரசில் அஜித் பவார் நிதியமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார்.

அவரிடம் மகாராஷ்டிரா மக்களுக்காகப் பாடுபடும்படி கேட்டுக்கொண்டேன். சமீபத்தில் மக்கள் அதிகாரத்துக்காக சண்டையிட்டுக்கொண்டதைப் பார்த்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் பிரச்னையைப் புறம்தள்ளிவிடக் கூடாது.

உத்தவ் அஜித் பவார் சந்திப்பு

அரசியல் பிரச்னைகளுக்கு மத்தியில் அடிப்படை பிரச்னைகளை புறந்தள்ளிவிடக் கூடாது என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன். நான் அவருடன் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். சிலர் அதிகாரத்துக்காக இங்கு சண்டையிட்டுக்கொள்கின்றனர். ஆனால், அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/F6D3NJE