உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையே போர் தொடங்கியது முதல், உலக நாடுகள் பலவும் ரஷ்யாவை எதிர்த்து வந்தன. மேலும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், உக்ரைனிலிருந்து சட்டவிரோதமாகக் குழந்தைகளை நாடு கடத்திய குற்றத்துக்காகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் International Criminal Court (ICC) கைது வாரன்ட் பிறப்பித்தது.

இந்த நிலையில், இது குறித்து ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான், “ரஷ்ய அதிபர் புதின் 123-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளில் காலடி எடுத்துவைத்தால் கைதுசெய்யப்படுவார்” எனத் தெரிவித்தார். ஆனால், ரஷ்யா ஐசிசி-யில் உறுப்பினராக இல்லை என்பதால், புதினைக் கைதுசெய்ய முடியாது என தெரிவித்திருந்தது.

ரஷ்ய அதிபர் புதின்

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டுக்கு தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியானது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கூட்டணி, `விளாடிமிர் புதினைக் கைதுசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா (Cyril Ramaphosa), “புதினைக் கைதுசெய்வது போன்ற நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது.

இதில் தென்னாப்பிரிக்காவுக்கு வெளிப்படையான சிக்கல்கள் இருக்கின்றன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தென்னாப்பிரிக்காவுக்கு வரும்போது கைதுசெய்யப்பட்டால், அது ரஷ்யாவுடனான போர் பிரகடனமாகக் கருதப்படும். ரஷ்யாவுடன் போரில் ஈடுபடுவது நமது அரசியலமைப்புக்கு முரணானது. இந்த விவகாரம் தொடர்பாக ஒவ்வொரு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறோம்” என தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்ய அதிபர் கைதுசெய்யப்படுவாரா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் உலக அரசியல் அரங்கில் தொடங்கிவிட்டது,

from Tamilnadu News https://ift.tt/09MnsWa