உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 2006-11 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தார். அந்தச் சமயத்தில் செம்மண் அள்ள ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்து, அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அ.தி.மு.க ஆட்சியில் 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருக்கிறது. அந்தச் சமயத்தில் அவரின் மகன் கெளதம சிகாமணி இந்தோனேசியாவில் 45 லட்சம் ரூபாயும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 லட்சம் ரூபாயும் ரிசர்வ் வங்கியின் விதிகளைப் பின்பற்றாமல் முதலீடு செய்ததாகச் சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக `ஃபெமா’ எனப்படும் `Foreign Exchange Managment Act’ சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை 2020-ம் ஆண்டில் நடவடிக்கை எடுத்தது.

அமலாக்கத்துறை

ரிசர்வ் வங்கியின் விதிகளைப் பின்பற்றாமல் கெளதம சிகாமணி வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடுகளின் மூலம் ஈட்டிய வருவாயைக் கணக்கில்கொண்டு, 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியிருக்கின்றனர்.

ஜூலை 17-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை பொன்முடியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், இரவு 8 மணிக்குப் பிறகு நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விடியற்காலை 3 மணிக்கு மேல்தான் பொன்முடி விசாரணை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். மறுநாள் மாலை பொன்முடியும், அவரின் மகன் கெளதம சிகாமணியும் மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்திய சமயத்தில், பொன்முடியின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டிருப்பது, எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காக பாஜக மேற்கொள்ளும் உத்தி என்று தி.மு.க விமர்சனம் செய்தது. ரெய்டுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் கண்டனம் தெரிவித்தார். `தி.மு.க-வுக்குச் சாதகமாக இதுவரை ஆளுநர் மட்டுமே பரப்புரை செய்துவந்த நிலையில், இப்போது அமலாக்கத்துறையும் அந்தப் பணியைத் தொடங்கிவிட்டது’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டித்தார். `அமலாக்கத்துறையை வைத்து வட இந்தியாவில் மத்திய அரசு மேற்கொண்ட அதே உத்தியை தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருக்கிறது’ என்றும் அவர் விமர்சித்தார்.

மு.க.ஸ்டாலின்

அதேபோல, ஆளுநர் ஆர்.என்.ரவியோடு நேரடியாக முரண்பட்டவர்களில் அமைச்சர் பொன்முடியும் ஒருவர். ஆளுநர் பங்கேற்கும் சில பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். ஆளுநரின் சனாதனம் குறித்த பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்தார். சட்டமன்றத்தில் ஆளுநர் உரை விவகாரம் சர்ச்சையாகி, ஆர்.என்.ரவி வெளியேறியபோது, முன்வரிசையில் அமர்ந்திருந்த பொன்முடி ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றியதும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இந்தச் சூழலில்தான் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடந்த ரெய்டு, அரசியல்ரீதியாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த ரெய்டு குறித்து அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறது.  “மொத்தம் ஏழு இடங்களில் சோதனை நடந்தது. 81.7 லட்சம் ரூபாய் பணம், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 41.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன” எனத் தெரிவித்திருக்கிறது.

மிகக் குறைவான முதலீடுகளை மேற்கொண்டு, அதிக தொகைக்கு அவற்றை விற்று லாபமீட்டியதில் ஹவாலா மோசடி நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை சந்தேகித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொன்முடி

ஆனால், “அமலாக்கத்துறைக்கு இந்த வழக்குகள் 2020-க்கு முன்பு வரை ஏன் கண்ணுக்கு தெரியவில்லை?’’ எனக் கேள்வி எழுப்புகிறார் திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா. இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறையை வைத்து அவர்களுடைய வேலையைச் செய்ய பா.ஜ.க எத்தனிக்கிறது. இந்தியாவில் இருக்கும் பல எதிர்க்கட்சிகள் அதற்கு பலிகடா ஆகலாம். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் பல எதிர்ப்பலைகளை நீந்திவந்த இயக்கம். எங்களை பா.ஜ.க-வால் இப்படியெல்லாம் மிரட்டிப் பணியவைக்க முடியாது.

செந்தில் பாலாஜி மீதான வழக்கோ அல்லது பொன்முடி மீதான வழக்கோ பதியப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. பாட்னா கூட்டம் நடந்த சமயத்தில் செந்தில் பாலாஜியைக் கைதுசெய்தார்கள். இப்போது பெங்களூரில் கூட்டம் நடந்த சமயத்தில் பொன்முடி வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். ஆக, இதை அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும், தங்கள் கட்சிக்கு ஆள் சேர்க்கவும் பயன்படுத்தும் ஆயுதமாகவும்தான் பார்க்கிறேன். 

தமிழன் பிரசன்னா

ஏனெனில், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான அஜித் பவார், நாராயண ராணே, சஞ்சய் பட்டேல், சுவந்து அதிகாரி, ஹேமந்த் பிஸ்வா சர்மா எனப் பலர் பா.ஜ.க-வில் இணைந்த பிறகு குற்றமற்றவர்கள் ஆனது எப்படி… பசவராஜ் பொம்மை மீதான ஊழல் குற்றச்சாட்டு என்னவானது… அமித் ஷா மீதான அமலாக்கத்துறை வழக்கு என்னவானது… மத்திய அமைச்சரவரையில் இருக்கும் 33 அமைச்சர்கள்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. எனவே, எதிர்க்கட்சிகள் மீது மட்டும் அரசியலுக்காக அமலாக்கத்துறையை ஏவிவிடுகிறார்கள். எங்களுடைய எத்தனை அமைச்சர்களை அவர்கள் குறிவைத்தாலும், ஆட்சியையே குறிவைத்தாலும் நாங்கள் கவலைப்படப்போவதில்லை. இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும். பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக இன்னுயிரையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாளை அதிகாரம் கைமாறும்போது இதே அமலாக்கத்துறை அமித் ஷா வீட்டுக்கும், அதானி வீட்டுக்கும் போகத்தான் போகிறது” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/QtwJOqp