கணவன், மனைவி இடையே பிரிவினை ஏற்பட்டுவிட்டால் பல நேரங்களில் அவர்களே உறவினர்கள் மூலம் தீர்வு கண்டு கொள்கின்றனர். சில நேரங்களில் போலீஸ், கோர்ட் என்று இருவரும் செல்கின்றனர்.

அப்படித்தான், மும்பையில் வசிக்கும் 55 வயது பெண், தன் கணவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் புகார் செய்துள்ளார். அத்தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

பராமரிப்புத் தொகை

55 வயது பெண்ணின் கணவர், ஒரு தொழிலதிபர். அவர் வேறு ஒரு நகரத்தில் தங்கி இருக்க, தவிர்க்க முடியாத காரணத்தால் அப்பெண்மணி மட்டும் மும்பைக்கு வந்து தனியாக தங்கி இருக்கிறார்.

அந்தப் பெண்மணி, தனக்கும் தன்னுடன் இருக்கும் மூன்று வளர்ப்பு நாய்களுக்கும் சேர்த்து, கணவர் மாதம் 70 ஆயிரம் ரூபாய் பராமரிப்புச் செலவு கொடுக்கவேண்டும் என்று கோரி, மும்பை மெட்ரோபாலிடன் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி கோமல்சிங் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்வேதா, `தவிர்க்க முடியாத காரணத்தால் 2021-ம் ஆண்டு மனுதாரரை அவரின் கணவர் வேறு ஒரு நகரத்தில் இருந்து மும்பைக்கு அனுப்பி வைத்தார். அனுப்பும் போது தேவையான பராமரிப்புச் செலவு கொடுப்பதாகத் தெரிவித்தார். ஆனால் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை.

திருமண வாழ்க்கையிலும் மனுதாரரிடம் அவரின் கணவர் அதிகமான நேரங்களில் குடும்ப வன்முறையில் ஈடுபட்டுள்ளார். எனவே மனுதாரருக்கும், அவருடன் இருக்கும் வளர்ப்பு நாய்களுக்கு சேர்த்து, மாதம் 70 ஆயிரம் பராமரிப்புச் செலவு கொடுக்கவேண்டும். மனுதாரருக்கு ஏற்கெனவே உடல் நிலை சரியில்லை. அதோடு அவருக்கு வேறு வருமானமும் கிடையாது’ என்று தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு

ஆனால் வளர்ப்புப் பிராணிக்கு பராமரிப்புச் செலவு கொடுக்க முடியாது என்றும், மனுதாரர்தான் விருப்பப்பட்டு தானாக மும்பைக்குச் சென்றார் என்றும், தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் கணவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ’மனுதாரருக்கும், அவருடன் இருக்கும் மூன்று வளர்ப்பு நாய்களுக்கும் சேர்த்து மாதம் ரூ.50 ஆயிரம் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும். மனுதாரர் தன் கணவரை மட்டுமே சார்ந்து வாழ்கிறார். அதோடு அவரது உடல்நிலையும் சரியில்லை. வளர்ப்பு நாய்களின் செலவுக்குப் பணம் கொடுக்க முடியாது என்பதை ஏற்க முடியாது. மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு வளர்ப்பு நாய்கள் மிகவும் முக்கியம். உடைந்து போன உறவுகளால் வெற்றிடமாகும் பிணைப்பை வளர்ப்பு பிராணிகள் பூர்த்தி செய்கின்றன’ என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

from Tamilnadu News https://ift.tt/mSvcNJe