அமைச்சர் வீட்டில் ரெய்டு:
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் 13-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதிலிருந்து பற்றிக்கொண்ட அரசியல் பரபரப்பு இன்றுவரை அடங்கவே இல்லை. இதனிடையே, அமைச்சர் பொன்முடியின் சென்னை, விழுப்புரம் இல்லம் தொடங்கி அவர் தொடர்புடைய ஏழு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதோடு, அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறைஅலுவலகத்துக்கு அழைத்துச் சென்று நள்ளிரவு வரை விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

எந்த வழக்கு தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை அறிந்துகொள்ள நாம் சற்று பின்னோக்கி செல்லவேண்டும். தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர், கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்துவந்தார். அந்த காலகட்டத்தில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைச்சரின் மகன் கௌதம சிகாமணி செம்மண் எடுப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்து அனுமதியும் பெற்றார். அந்த சமயத்திலேயே அவரின் உறவினர்களான ராஜ மகேந்திரன், ஜெயச்சந்திரன் ஆகிய இருவருக்கும் அனுமதி கிடைத்திருக்கிறது.
வழக்குப் பதிவு:
2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக பொன்முடி, கௌதம சிகாமணி, ராஜ மகேந்திரன், லோகநாதன் உட்பட எட்டு பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த விழுப்புரம் நீதிமன்றம் அனைவரையும் விடுத்துவித்துவிட, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தை நாடிக் கொள்ளுங்கள் என்று கூறியது.

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கு விசாரணை வேலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது. அதேபோல, விழுப்புரத்தில் உள்ள எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த சூழலில்தான் இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் பொன்முடி. அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டைச் சுட்டிக்காட்டியும், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்படி தடைவிதிக்க முடியாது என்று அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
‘ஃபெமா’ சட்டத்தின் சொத்துக்கள் முடக்கம்:
இதனிடையே வெளிநாடுகளில் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் கௌதம சிகாமணி முதலீடு செய்து பல கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார் என்று அமலாக்கத்துறை சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவந்தது. கடந்த 2020-ம் ஆண்டு கௌதம சிகாமணி இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் முதலீடு செய்து லாபம் சம்பாதித்ததாக 8.60 கோடி ரூபாய் சொத்துக்களை ‘ஃபெமா’ சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில்தான் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் தொடர்புடைய இடங்களில் கடந்த 17-ம் தேதி காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏழு இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணம், வெளிநாட்டு கரன்சி, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.
பினாமி – ஹவாலா – அமலாக்கத்துறை:
ரெய்டு தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமலாக்கத்துறை கடந்த 17.7.2023 அன்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடிக்குச் சொந்தமான 7 இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. அதேபோல் அவரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளதம் சிகாமணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தியது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டம் 2002-ன் கீழ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டவிரோத செம்மண் குவாரிகள் தொடர்பான வழக்கில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பொன்முடி அப்போது கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார்.

அவரின் மகன், உறவினர்கள் எனப் பினாமி பெயர்களில் உரிமம் வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். சட்டவிரோத செம்மண் மணல் சுரங்கங்களில் கிடைத்த வருமானமானது பினாமி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் PT Excel Mengindo என்ற கணக்கிலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் Universal Business Ventures FZE என்ற நிறுவனப் பெயரின் கணக்கிலும் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசிய நிறுவனம் ரூ.41.57 லட்சத்துக்கு வாங்கப்பட்டு பின்னர் 2022-ல் ரூ.100 கோடிக்கும் மேல் விற்கப்பட்டது. ஹவாலா மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சோதனையின்போது கணக்கில் வராத ரூ.81 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. வெளிநாட்டுக் கரன்சிகள் குறிப்பாகப் பிரிட்டிஷ் பவுண்ட் கரன்ஸிக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.13 லட்சம். இவற்றிற்கான ஆதாரம் பற்றி விளக்கம் இல்லை. இவை அனைத்தும் பொன்முடி இல்லத்திலிருந்து எடுக்கப்பட்டது. விசாரணையைத் திசைதிருப்பும் வகையில், அவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமான மருத்துவமனையின் பணம் அது என்றும் தெரிவிக்கப்பட்டது. கணக்கு தணிக்கை பதிவுகள் போலியாக ஜோடிக்கப்பட்டதும் அமலாக்கத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

பொன்முடி இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கு முறையான விளக்கம் ஏதும் இல்லை. அமலாக்கத் துறை விசாரணையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சம்பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து வருகிறோம். ரூ.41.9 கோடி பணத்தைச் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டம் 17(1A)-ன் கீழ் நாங்கள் முடக்கியுள்ளோம். இது வைப்புத் தொகையாக வங்கியிலிருந்தது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தோனேசியா முதலீடு?:
இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் மீது முதலீடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “முறைகேடாகச் சம்பாதித்த பணத்தை ரிசா்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதே வேளையில், இந்தோனேசியாவில் ஒரு நிறுவனத்தைக் கிட்டத்தட்ட 40 லட்சத்துக்கு வாங்கி, அதனை 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார்கள். இந்த விவரங்களை அனைத்தையும் சம்பந்தப்பட்ட நாட்டிலிருந்து முழுமையாகப் பெற்றிருக்கின்றோம்.

இந்த விசாரணையில், இந்தோனேசியாவில் இவர்கள் வாங்கியதாகச் சொல்லப்படும் பணத்துக்கும், அங்கே பதிவு செய்யப்பட்ட பணத்துக்கும் பலமடங்கு வித்தியாசம் இருக்கிறது. அவ்வளவு பணத்தை அந்த நாட்டுக்கு எப்படிக் கொண்டு சென்றார்கள். சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரமும் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக பொன்முடி, அவரின் மகனிடம் பல கேள்விகள் கேட்டிருக்கின்றோம். அதே சமயத்தில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கரன்சி தொடர்பாகவும் கேள்வி கேட்டிருக்கின்றோம். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்றார்கள்.
from Tamilnadu News https://ift.tt/CZaNV2f
