தி.மு.க ஆட்சிக்கு வந்த கையோடு ரெய்டில் சிக்கிய அந்த ‘வீரமான’ மாஜி, அதன் பிறகு ‘கப்சிப்’ ஆகிவிட்டார். “எதற்கும் பயப்படாதீங்க… நான் இருக்கேன்’’ என்று துணிவானவர் தெம்பு கொடுத்த பிறகு, பதுங்கு குழியிலிருந்து லேசாக வெளியே தலைகாட்ட ஆரம்பித்தார் வீரமானவர். ஆனால், கர்மவீரர் பெயரைக்கொண்ட மாஜிமீது குற்றப்பத்திரிகை தாக்கலானதைப் பார்த்ததும், மனிதர் மீண்டும் மிரண்டுவிட்டாராம். இந்தத் தகவல் அறிந்ததும், ‘நமக்கொரு அடிமை சிக்கிருச்சு…’ என உற்சாகத்தில் இருக்கிறாராம் நக்கலுக்குப் பெயர்போன தி.மு.க சீனியர். நாடாளுமன்றத் தேர்தலுக்காக இலைக் கட்சியிலிருந்து இரண்டு, மூன்று மாஜிக்களையாவது அறிவாலயத்துக்குத் தூக்க வேண்டுமென்று திட்டமிடப்பட்டிருப்பதால், முதல் ஆளாக இவருக்குத் தூதுவிட்டிருக்கிறார்களாம். விரைவிலேயே கரைவேட்டியை மாற்றிக் கட்டிவிடுவார் வீரப்புள்ளி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தமிழ்நாட்டிலுள்ள மலைகளை உடைத்து, கேரள மாநிலத்துக்கு கனிம வளமாகக் கடத்துவதைக் கண்டித்து ‘பாம்பு’ கோவில் நகரில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார் ‘டோல்கேட் உடைப்பு’க்குப் பெயர்போன கட்சித் தலைவர். ‘கைதட்டுக்காக அவர்பாட்டுக்கு, நம்மைப் பற்றி நரம்பு புடைக்கப் பேசிவிடுவாரோ?’ என்று பயந்துபோன உள்ளூர் அமைச்சர் தரப்பு, இடையிலேயே அவரை மடக்கி டீல் பேசியிருக்கிறது. “நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு… கூட்டணியில் இருந்துகொண்டு நீங்களே இப்படிப் பண்ணுனா எப்படிண்ணே?’’ எனக் கண்ணைக் கசக்கியதாம் அமைச்சர் தரப்பு.

மனமிறங்கிய அந்தத் தலைவர், உள்ளூர் விவகாரங்களைப் பற்றி எதுவும் பேசாமல், ‘வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டுசெல்வதால் நம் மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது’ என்று மட்டும் பொதுவாக உருட்டிவிட்டு ஊர் திரும்பிவிட்டாராம். “வேல் வீச வந்த வடமாவட்டத் தலைவரை… வெள்ளைக்கொடி ஏந்தி புறமுதுகிடச் செய்த நம்ம அண்ணனின் செயல்தான் ராஜதந்திரம்” என்று புகழ்ந்துகொண்டிருக்கிறார்களாம் அமைச்சரின் அடிப்பொடிகள்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துவருவதால், ‘எங்ககிட்டயும் சீப்பிருக்கு… நாங்களும் சீவுவோம்ல’ கதையாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை, டெல்லியில் நடத்தியிருக்கிறது பா.ஜ.க. அந்தக் கூட்டணியிலேயே பெரிய கட்சி என்பதால், அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடியை மோடிக்கு அருகே அமரவைத்ததுடன், கூடுதல் முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார்கள். தனக்குக் கிடைத்த ‘தென்னிந்தியப் பிரதிநிதி’ அந்தஸ்தால் குஷியான இ.பி.எஸ்., ஊர் திரும்பிய பிறகும் சிரித்தபடியே காட்சி தந்தாராம்.

இதையெல்லாம் டி.வி-யில் பார்த்து, ‘அவங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டின என்னையக் கழற்றிவிட்டுட்டு, எதிர்வாதம் பண்ணினவருக்கு முக்கியத்துவமா?’ என்று உச்சக்கட்ட கடுப்பாகிவிட்டாராம் ஓ.பி.எஸ். ‘விடுங்க அண்ணே… போனவங்கல்லாம் டாக்டர் கிருஷ்ணசாமி, பாரிவேந்தர், தேவநாதன்ஜி மாதிரியான ஒன்மேன் ஆர்மிங்கறதாலதான் அவருக்கு இந்த மரியாதை’ என்று தேற்றியிருக்கிறார்கள் உடனிருந்தவர்கள். ‘அந்த ஒன்மேன் ஆர்மிகள்ல ஒருத்தராக்கூட நம்மை மதிச்சு கூப்பிடலையே?!’ என்று சொல்லி மறுபடியும் ஆதங்கப்பட்டாராம் ஓ.பி.எஸ்!

புதுக்கோட்டை தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் கே.கே.செல்லபாண்டியன், தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளிலெல்லாம் தன் சமூகத்தினருக்கே அதீத முக்கியத்துவம் கொடுப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. “90 சதவிகிதப் பதவிகளுக்கு அவருடைய ஆட்களைத்தான் போட்டிருக்கிறார்கள்…’ என்று கொதிக்கிறார்களாம் புதுக்கோட்டையில் அடர்த்தியாக இருக்கும் மாற்றுச் சமூக உடன்பிறப்புகள். “தேர்தல் சமயத்தில் புதுக்கோட்டையில் இது பெரும் பிரச்னையாக வெடிக்கும். அதற்கான தீயை மா.செ-வே பற்றவைத்துவிட்டார்” என மேலிடத்துக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்களாம் உள்ளூர் உடன்பிறப்புகள்.

காவல்துறை

தலைநகர காவல் அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கு, முருகனின் பெயரைக்கொண்ட அந்த அதிகாரிதான் ஆல் இன் ஆலாக இருக்கிறாராம். சமீபத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலருக்கு இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. ஆனால், அவர்களுக்கான புதிய பணியிடம் எதுவென்று சொல்லாமல், பழைய பதவியிலேயே உட்காரவைத்திருக்கிறார்களாம். ‘இன்ஸ்பெக்டராக நல்ல இடத்தில் உட்கார வேண்டுமென்றால், பத்து லட்டுகளை இங்கே உருட்ட வேண்டும்’ என உத்தரவு போட்டிருக்கிறாராம் அந்த நிழல் அதிகாரி. அதனால் பதவி உயர்வு கிடைத்தும், போஸ்ட்டிங் கிடைக்காமல் புதிய இன்ஸ்பெக்டர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியின் அனைத்து டீலிங்குகளையும் நிழலானவரே கவனிப்பதால், அவரைப் பற்றி மேலிடத்தில் புகாரும் கொடுக்க முடியவில்லை என்று புலம்புகிறார்கள் பதவி உயர்வு இன்ஸ்பெக்டர்கள்!

from Tamilnadu News https://ift.tt/TIgrtkx