“ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி விவகாரத்தில் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்” என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் தெரிவித்தார்.

சென்னைக்குச் செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்திருந்த ஓ.பன்னீர்ச்செல்வம், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மணிப்பூரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் எடுக்க வேண்டும். இது குறித்து ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பாக இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும். மணிப்பூர் விவகாரத்தில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்” என்றார்.
அதைத் தொடர்ந்து, ” `ஸ்டாலினை முதல்வராக்குவோம்’ என்று திண்டுக்கல் சீனிவாசன் மாற்றிப் பேசியிருக்கிறாரே?” என்று அவரிடம் எழுப்பப்பட்டக் கேள்விக்கு, “இது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி. திண்டுக்கல் சீனிவாசன் எங்கிருந்தாலும் வாழ்க” என்றார்.

“அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளராக இன்னும் நீங்கள்தான் நீடித்து வருகிறீர்களா?” என்றதற்கு, “உங்களுக்குப் புரிந்திருக்கிறது, புரிய வேண்டியவர்களுக்குப் புரியவில்லை” என்றார். அதைத் தொடர்ந்து, “என்.டி.ஏ கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொள்ள உங்களுக்கு அழைப்பு வந்ததா?”எனக் கேட்டதற்கு, “அழைப்பு வரவில்லை. அதனால் செல்லவில்லை” என்றார்.
“பா.ஜ.க கூட்டணியில் தொடர்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியதற்கு, “அவர்களாக முறித்துக்கொள்ளும் வரை, நாங்கள் அந்தக் கூட்டணியில் தொடர்கிறோம்” எனக் கூறினார்.

“தி.மு.க அமைச்சர்கள்மீது அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள்” குறித்து கேட்டதற்கு, “அமைச்சர்கள்மீது வழக்கு தொடர்ந்தால் அதை எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டியது அவர்களின் பொறுப்பு” என்றவர், “எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வைத்திருக்கும் `இந்தியா’ என்ற பெயர் நல்ல தலைப்புதான். ஓ.பி.ரவீந்திரநாத் வழக்கில் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
from Tamilnadu News https://ift.tt/72LVEIT
