2011-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பேற்ற அ.தி.மு.க, 2006 முதல் 2011 ஆண்டு வரை நடைபெற்ற தி.மு.க ஆட்சியில் மக்கள் நல்வாழ்வு, பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் கைத்தறி துறைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரின் மனைவி ஆதிலட்சுமி, இவர்களுக்கு உறுதுணையாக இருந்ததாகத் தொழில் அதிபர் சண்முகமூர்த்தி உள்ளிட்டோர்மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, 2012-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமெனக் கேட்டு, 2016-ம் ஆண்டு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு மனுக்கள்மீதும் விசாரணை நடத்தப்பட்டதில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்‌.ஆர்.ராமச்சந்திரன் உட்பட சொத்துக்குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக, சுமார் 26 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்ற வளாகம்

இரு தரப்பு வாதங்களும் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், இன்று இறுதி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரின் மனைவி ஆதிலட்சுமி, இவர்களுக்கு உதவியாக இருந்ததாகத் தொழில் அதிபர் சண்முகமூர்த்தி உள்ளிட்ட மூவரையும் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி திலகம் உத்தரவிட்டிருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/sJFLZy0