விலைவாசி உயர்வை கண்டித்தும், திமுக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமையற்று பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடியலை தருவோம்; மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்க வழிவகை செய்வோம்; வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம்; விலைவாசிகளை கட்டுக்குள் கொண்டுவருவோம்’ என்றெல்லாம் அன்று சொன்ன மு.க.ஸ்டாலின், இன்று முதலமைச்சர் பதவியிலே அமர்ந்து கொண்டிருக்கிறார். அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என சொல்ல மாட்டோம். பதவியிலே அமர்ந்துக் கொண்டிருக்கிற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினை, இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் அதிகார சக்திகள்.

அதிமுக ஆர்ப்பாட்டம் – விழுப்புரம்

திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டு இன்றைக்கு திருடர்கள் மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இது திராவிட மாடல் அல்ல, திருடர்கள் மாடல் அரசு. இந்த ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு காலம் முடியப்போகிறது. இந்த ஆட்சியினுடைய வேஷம் கலைந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதுவதற்கான, துவக்கவுரை துவங்கிவிட்டது. இந்த ஆட்சி புழல் சிறைக்கும், திகார் சிறைக்கும் செல்வதற்கான காலங்கள் துவங்கிவிட்டது. இப்போதுதான் அடிமடியில் கை வைத்திருக்கிறார்கள். செந்தில்பாலாஜி, பொன்முடி-க்கு அடுத்தாக அனிதா ராதாகிருஷ்ணன் என வந்து, கடைசியிலே மு.க.ஸ்டாலினின் கழுத்தை நெறிக்கும். அமலாக்கத்துறையை வைத்து கொண்டு, பாஜக எதிர்கட்சிகளை முடக்க பார்ப்பதாக கூறும் ஸ்டாலின்… காவல்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து கொண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை செய்யும்போது தெரியவில்லையா… நீங்க என்ன பண்ணீங்களோ அதுதான் உங்களுக்கும் திரும்பி வரும். 

எங்களுடைய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்னப்பா தவறு பண்ணினார்… மாநகராட்சியிலே நடைபெற்ற வாக்கெடுப்பின்போது கள்ள ஓட்டு போட முயற்சித்த நபரை தடுத்து, காவல்துறையிடம் பிடித்துக்கொடுக்கிறார். ஆனால் கள்ள ஓட்டு போட முயன்றவன் மீது நடவடிக்கை எடுக்காமல், பிடித்துக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைதுசெய்ய 2000 போலீஸை கூப்பிட்டுக்கொண்டு சென்றீர்கள். ‘வேட்டி மாற்றிக் கொண்டு வருகிறேன்’ என்று சொன்னபோதும்… அதற்கும் விடாமல், கட்டிய கைலியோடு போலீஸ் வேனில் அழைத்து வந்தீர்கள். அப்போதும் நேரடியாக காவல் நிலையம் அழைத்துச் செல்லாமல், 3 மணி நேரமாக சென்னையை சுத்தி சுத்தி வந்தீர்கள். இப்போது கதறுகிறீர்களே… அப்போது எங்கே போனது உங்களுக்கு புத்தி. உனக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா… 

அதிமுக ஆர்ப்பாட்டம் – விழுப்புரம்

இதுக்கே கத்துகிறீர்களே, இன்னும் நிறைய வரும். இது சோதனைதான், இன்னும் தொடர்ச்சியாக இருக்கிறது. உன் பிள்ளை உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை வரும் போதுதான் அருமை தெரியும். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். கொள்ளை அடித்த நீ அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஏதோ உத்தமர், யோக்கியர் போல பேசுறீங்க. காந்திக்கு பக்கத்து வீட்டுக்காரர் போல பேசுகிறார் ஸ்டாலின். ஊழலை பற்றி பேசுவதற்கு இந்த ஸ்டாலினுக்கோ, அவர் குடும்பத்திற்கோ, தி.மு.க-விற்கோ அருகதையே கிடையாது. யார் ஊழலை பற்றி பேசுவது..?” குப்பைக்கு கூட குப்பைவரி போட்டவர் இந்த குப்பை முதலமைச்சர். 

இந்த உலகத்திலே, ரத்தம் தான் விலை மதிக்கமுடியாத ஒன்று. ஆனால், இன்று ரத்தத்தை விட தக்காளி மதிப்பு உயர்ந்திருக்கிறது. இனி இப்படி மாற்றி சொல்ல வேண்டும்… “உங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்டினி, எங்களுக்கு வந்தால் ரத்தமா?. இதுதான், இந்த திருடர்களுடைய ஆட்சியிலே முதலமைச்சர் ஸ்டாலின் செய்திருக்கின்ற சாதனை. மக்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதிகள், முழுமையாக மக்களுக்கு சென்றடைந்தால் இந்த விலைவாசி உயர்வே வராது. ஆனால் மக்களுக்கு செல்லாமல் முதலமைச்சர், அமைச்சர்கள்…. மக்களுக்கான பணத்தை இன்றைக்கு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒருத்தரை மாற்றி மற்றொருவர் இன்றைக்கு ஜெயிலுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களின் சாபம், தாய்மார்களின் வயிற்றெரிச்சல் சும்மா விடாது. அது உங்கள் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவது மட்டுமல்ல, நிரந்தரமாக சிறைக்கும் அனுப்பும். 

சி.வி.சண்முகம்

நிர்வாகம் செய்வதற்கு இந்த அரசிற்கு நேரமில்லை. ஏன், நிர்வாகமே தெரியாது. அப்பன், பிள்ளை, பேரன், கொள்ளு பேரன் என ஒரே குடும்பத்திற்காக திமுக போல சுமக்கும் அடிமை கட்சியல்ல அதிமுக. மு.க.ஸ்டாலின் அதிகார போதையில் இருக்கிறார். அதைதான் அமலாக்கத்துறை தட்டித்தட்டி ஆப்ரேஷன் செய்து கொண்டிருக்கிறது. விரைவில் எல்லாம் முடிந்துவிடும். தமிழகத்தில் நிழல் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின், பெங்களுரிவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்துக்கொள்ள சென்றபோது, கூட்டணியில் உள்ள கர்நாடகாவிடம் தண்ணீர் குறித்தும், தக்காளி விலை உயர்வை கட்டுபடுத்துவது குறித்தும் பேசவில்லை” என்றார் காட்டமாக.

from Tamilnadu News https://ift.tt/Ougdkps