“காய்கறி உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வு, அனைத்து துறைகளிலும் தலைவிரித்தாடும் ஊழல் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க அரசையும், இவற்றைக் கண்டும் காணாமல் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்தும் 20-ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என முன்னதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாநிலம் முழுவதும் அந்தக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ப.மோகன் கலந்துகொண்டார்.

மேடையில் பேசிய நிர்வாகிகள் பலரும், தி.மு.க அரசை விமர்சனம் செய்தனர். அத்துடன் தி.மு.க அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பேசிய ப.மோகன், “இரண்டு ஆண்டுகளில் மக்கள் விரோத சக்தியாக தி.மு.க ஆட்சி மாறியிருக்கிறது. ஸ்டாலின், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய்யான வாக்குறுதிகளைத் தந்தார். அவற்றை நிறைவேற்றினாரா… `மின்சாரக் கட்டணம், பால் விலையை குறைப்போம்’ என்றார்.
`பெண்களுக்கு மாத ஊதியம் தருவோம், நீட் தேர்வை ஒழிப்போம், அரசு ஊழியர்களுக்குப் பழைய ஊதியத் திட்டத்தைத் தருவோம்’ என்றார். இதில் எதாவது ஒன்றைச் செய்திருக்கிறாரா… அ.தி.மு.க ஆட்சியில் சொன்னவற்றைச் செய்து தந்தோம். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி ஏற்றம் எந்தளவுக்கு உள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத ஸ்டாலின் அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மின்சாரக் கட்டணம் தமிழ்நாட்டில் மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. சாலைவரியை அதிகப்படுத்தியிருக்கின்றனர். நிர்வாகம் செய்ய முடியாத, தெரியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது என கேட்கும் அளவுக்கு இருக்கிறது. உள்துறை, காவல்துறையை கையில் வைத்திருக்கக்கூடிய ஸ்டாலினால் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. அ.தி.மு.க ஆட்சியில் அரசு அலுவலர்கள் பயந்து நடந்தனர்.
சட்டம் ஒழுங்கு சீராக இருந்தது. அ.தி.மு.க ஆட்சிக்கும், தி.மு.க ஆட்சிக்கும் நிறைய வேறுபாடுகளைச் சந்திக்கிறீர்கள். அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது 11 மருத்துவக் கல்லூரிகள், 25-க்கும் மேற்பட்ட கலைக்கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. `காவிரியில் பிறந்தவன், காவிரி தண்ணியைக் குடித்தவன், திருவாரூரிலே சுற்றி வந்தவன்’ என மறைந்த முதலமைச்சர் கருணாநிதி சொல்வார். ஆனால் அவர் காவிரிக்காக எதையும் செய்யவில்லை. டெல்டா பகுதிக்கு உயிர்கொடுத்த கட்சி அ.தி.மு.க-தான். மீத்தேன் திட்டத்துக்கு தி.மு.க ஆட்சியில்தான் முதல் கையெழுத்து போடப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி, டெல்டாவை வேளாண் மண்டலமாக உயர்த்தினார். இந்தப் பகுதிக்கு உயிர்நாடியாக அ.தி.மு.க இருந்தது. காவல் நிலையத்தில் போலீஸை வெட்டுகின்றனர். நீதிமன்றத்தில் நீதி சொல்லும் நீதிபதியை வெட்டுகின்றனர். இவையெல்லாம் தி.மு.க ஆட்சியில் நடக்கிறது. ஆட்சியில் இருக்கக்கூடிய அமைச்சர் தண்டனை பெறுகிறார், அவர் கைதி எனச் சொன்னதற்குப் பிறகும் முதலமைச்சர் சென்று அவரைப் பார்க்கிறார். குற்றவாளிகளைக் காப்பாற்றுவது தி.மு.க அரசின் கடமையாக இருக்கிறது.
தி.மு.க அமைச்சரவையில் இருக்கக்கூடிய முன்னாள் நிதியமைச்சர், 30,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சொன்னார். அதற்கு ஸ்டாலின் இதுவரை பதில் சொல்லவில்லை. அந்த பணம் எங்கே சென்றது. இங்கு வந்திருக்கிற கூட்டம் `தஞ்சாவூர் அ.தி.மு.க-வின் கோட்டை’ என்பதை காட்டுகிறது. வருத்தமாக இருந்தாலும்கூட இங்கே ஒரு குறளை சொல்வது என் கடமை.

`எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை’ என்ற குறளை தஞ்சையிலே சொல்ல வேண்டும் என்பது என் எண்ணம். இந்தக் குறளுக்கு என்ன அர்த்தம் எடுத்து கொள்கிறீர்கள் என எனக்குத் தெரியாது. (கூட்டத்தில் நின்றவர்கள் வைத்திலிங்கத்தைச் சொல்கிறார் என்று முணுமுணுத்தனர்) உச்ச நீதிமன்றம், உயர் நிதீமன்றம், தேர்தல் ஆணையத்தில் நல்ல தீர்ப்பை பெற்று தெளிந்த நீரோடையாக தற்போது அ.தி.மு.க இருக்கிறது. இரட்டை இலை என்றைக்கும் சோடை போகாது. தி.மு.க ஆட்சிக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/EQKVixc
