அவரச சூழ்நிலைகளில் காவல் துறையினரை பலரும் உதவிக்கு அழைப்பதுண்டு. ஆனால், சமீபத்தில் மங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய காலணியைக் காணவில்லை என, காவல் துறையினரை அழைத்த சம்பவம், அவர்களின் பணிச்சுமை குறித்த கவலையை எழுப்பி உள்ளது.

மங்களூருவின் வடக்கு காவல் நிலையத்தில் அவசர உதவி எண்ணான 112-க்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், `நான் ஒரு சிட்டி ஹாலில் மீட்டிங்கில் கலந்து கொண்டேன். மீட்டிங் முடித்து விட்டு வெளியே வந்து பார்த்த போது, என்னுடைய காலணியைக் காணவில்லை. காணாமல் போன என்னுடைய காலணியைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்’ என புகாரளித்து இருக்கிறார்.
இந்தச் சம்பவத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்ட காவல் துறையினர், அதிகாரிகளை நியமித்து விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர். அருகில் இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த நிகழ்ச்சியில் வேலை செய்தவர் காலணியை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
ஆனால், திருடியவரைக் கண்டுபிடித்த காவல் துறையினரால், காலணியைக் கைப்பற்ற முடியவில்லை. புகாரளித்தவர், காலணியின் தொகைக்கான பில்லையும் கொடுக்கவில்லை. இ- காமர்ஸ் தளத்தில் ஆண்கள் அணியும் clog வகை காலணிகள் 515 ரூபாய் முதல் 1,600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

13-ம் நூற்றாண்டுகளில் டச்சு விவசாயிகள், முழுதும் மரத்தால் செய்யப்பட்ட அல்லது தடித்த கட்டையால் ஆன அடிப்பகுதியை உடைய இந்த clog காலணியை அணிந்திருக்கின்றனர். காலப்போக்கில் ஃபேஷனுக்கு ஏற்ற வகையில், இந்தக் காலணிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
“அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் காவல்துறை உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு பேச மக்கள் வரவேற்கப்படுகிறார்கள். அதேசமயம் மக்கள் எந்தெந்த விஷயங்களுக்குப் புகார் அளிக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு நாளைக்கு இதை விட அதிக உதவி தேவைப்படும் பிரச்னைகளும் இருக்கலாம்” என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Tamilnadu News https://ift.tt/nqIsCfz
