நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, பா.ஜ.க-வில் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருக்கிறார். அவர் சென்னை, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையிலுள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாகப் பத்திரப்பதிவு செய்திருப்பதாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.

செய்தியாளர் சந்திப்பு

அந்த நிலம் மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமானது எனவும், மதுரையைச் சேர்ந்த இளையராஜாவுடன் சேர்ந்து நயினார் பாலாஜி மோசடியாக நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் கிரய ஒப்பந்தம் செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை, நயினார் பாலாஜியின் பத்திரப்பதிவை ரத்துசெய்து உத்தரவிட்டது.

நயினார் பாலாஜி மீது எழுந்த இந்தப் புகார் பா.ஜ.க வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், தன்மீதான புகார் குறித்து நயினார் பாலாஜி விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், “பத்திரப் பதிவுச் சட்டம் 77-ஏ பிரிவைப் பயன்படுத்தி பத்திரப் பதிவுகளை ரத்துசெய்யக் கூடாது என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது.

விளக்கமளித்த நயினார் பாலாஜி

ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள் என்னுடைய கிரைய ஒப்பந்தப் பத்திரப்பதிவை ரத்துசெய்திருக்கின்றனர். விருகம்பாக்கத்திலுள்ள சார் பதிவாளர் மற்றும் தமிழக அரசு வழக்கறிஞரிடம் தடையில்லா சான்று பெற்றே கிரைய ஒப்பந்த பத்திரப்பதிவு நடந்தது. நான் நிலம் வாங்கிய அப்பாவி. உண்மையில் நான் சொத்தை இன்னும் வாங்கவில்லை. அதற்கான கிரைய ஒப்பந்தம் மட்டுமே போட்டிருக்கிறேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எனது பத்திரப்பதிவு ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடவிருக்கிறேன். நான் சார்ந்த பா.ஜ.க-மீதான தாக்குதலாகக்கூட இது நடந்திருக்கலாம். நான் சொந்தமாக நிலம் வாங்க முயன்றேன். இதில் என்னுடைய தந்தைக்கு எந்தத் தொடர்பும் கிடையாது” எனத் தெரிவித்தார்.

from Tamilnadu News https://ift.tt/BCX6YWy